மாமல்லபுரம் சாலை விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல் அமைச்சர் நிதியுதவி அறிவிப்பு
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்திரவிடப்பட்டுள்ளது.;
சென்னை,
சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் சென்னை நோக்கி ஆட்டோவில் ஒரு குடும்பத்தினர் வந்துகொண்டிருந்தனர்.
அப்போது செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் எதிர்பாராதவிதமாக ஆட்டோ, பேருந்து மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர், 2 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற விபரம் இன்னும் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்திரவிடப்பட்டுள்ளது.