மாமல்லபுரம் அரசினர் சிற்பக்கலைக்கல்லூரி வளர்ச்சி பணிகளுக்கு ரூ.2½ கோடி ஒதுக்கீடு - தமிழக செய்தித்துறை அமைச்சர்

மாமல்லபுரம் அரசினர் சிற்பக்கலைக்கல்லூரி வளர்ச்சி பணிகளுக்கு ரூ.2½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.

Update: 2023-07-11 09:18 GMT

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கல்லூரி தமிழக அரசின் கலை பண்பாட்டு துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் மேம்பாட்டு பணிகள் குறித்து தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கல்லூரிக்கு நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது உலோக சிற்பம், கற்சிற்பம், சுதை சிற்பம், மரச்சிற்பம், வண்ண ஓவியம் ஆகிய பாட பிரிவுகளுக்கு சென்று ஆய்வு செய்து மாணவர்கள் வடித்த சிற்பங்களை பார்வையிட்டு, அவர்களிடம் குறைகள் கேட்டறிந்தார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், 'இந்த கல்லூரியில் 2021-2022 ஆம் கல்வியாண்டில் இறுதி ஆண்டு பயின்ற 13 மாணாக்கர்களுக்கும், 2022-2023 ஆம் கல்வியாண்டில் இறுதி ஆண்டு பயின்ற 11 மாணாக்கர்களுக்கும் வெளி நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு முகாம் மூலம் பயனடைந்து வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். கல்லூரி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிக்காக இந்த ஆண்டு ரூ.2 கோடியே 65 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது' என்றார்.

இந்த ஆய்வின்போது திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி, கலை பண்பாட்டுத்துறை ஆணையர் சுகந்தி, கலை பண்பாட்டுத் துறை இணை இயக்குனர் சிவ சவுந்தரவல்லி, மாமல்லபுரம் அரசு சிற்பக்கலைக் கல்லூரி முதல்வர் சி.ராமன், உள்பட பலர் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்