வளர்ச்சிப் பணிகளில் முறைகேடு: மேலூர் ஊராட்சி தலைவர், துணைத்தலைவரை ஏன் பதவி நீக்கம் செய்யக்கூடாது?-விளக்கம் கேட்டு கலெக்டர் நோட்டீஸ்
வளர்ச்சி பணிகளை சரியாக மேற்கொள்ளாத புகாரின் அடிப்படையில் மேலூர் ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் ஆகியோரை ஏன் பதவி நீக்கம் செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு கலெக்டர் அம்ரித் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
ஊட்டி
வளர்ச்சி பணிகளை சரியாக மேற்கொள்ளாத புகாரின் அடிப்படையில் மேலூர் ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் ஆகியோரை ஏன் பதவி நீக்கம் செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு கலெக்டர் அம்ரித் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேலூர், பர்லியார், வண்டிச்சோலை, உபதலை, பேரட்டி, எடப்பள்ளி 6 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் மேலூர் ஊராட்சி தலைவராக ரேணுகா, துணை தலைவராக நாகராஜ் ஆகியோர் உள்ளனர். இந்த ஊராட்சிகளில் நடைபாதை அமைத்தல், தடுப்புச்சுவர் கட்டுதல், சாலை சீரமைத்தல், குடிநீர் குழாய் பதித்தல் உள்ள பல்வேறு வளர்ச்சி பணிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து வந்தன.
இந்த நிலையில் மேலூர் ஊராட்சி உள்பட ஒரு சில இடங்களில் வளர்ச்சி பணிகளில் முறைகேடுகள் நடந்ததாகவும், வளர்ச்சி பணிகள் சரியாக கண்காணிக்கப்படவில்லை என்பதால் தரம் இல்லாமல் இருப்பதாகும் அந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித்திடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
பணியிடை நீக்கம்
இதையடுத்து இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதில் பல்வேறு இடங்களில் வளர்ச்சி பணிகள் தரம் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தரமில்லாமல் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகளை கண்காணிக்க தவறியதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரியும் சந்திரசேகர், என்ஜினியர் ராஜ்குமார் ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டார். வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் என்ஜினியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் இடையே கலகத்தை ஏற்படுத்தி இருந்தது.
பதவி நீக்கம்?
இந்த நிலையில் மேலூர் ஊராட்சி பணிகள் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டது சம்பந்தமாக தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994- 205 மற்றும் 206 -ன் படி, ஊராட்சி தலைவர் ரேணுகா, துணைத் தலைவர் நாகராஜ் ஆகியோரை ஏன் பதவி நீக்கம் செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு அவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் நோட்டீஸ் அனுப்பிய உள்ளார்.
மேலும் தரமற்ற முறையில் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்திய ஒப்பந்ததாரர்கள் மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒப்பந்ததாரர்களிடம் 3 சதவீத கமிஷன் கொடுத்தால் தான் ஊராட்சி பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஊராட்சி துணைத் தலைவர் நாகராஜ் பேசிய வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் அளிக்கும் விளக்கம் திருப்தி அளிக்காதபட்சத்தில் அவர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என்றும், காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் பறிபோகும் என்றும் தெரிகிறது. இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.