100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு - சிவகங்கை கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
முறைகேடு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க சிவகங்கை கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், "சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா கண்டதேவி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்படி, 100 நாள் வேலைத்திட்டத்திற்கு பல்வேறு நபர்களுக்கு வேலைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊராட்சி தலைவரின் கணவர் பெயர், தாயார் பெயர், வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள், கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றி வரும் நபர்கள் ஆகியோரின் பெயர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டவிதிமுறைகளுக்கு மாறாக இத்தகைய செயல்கள் நடைபெறுகின்றன. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு இன்று மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கருத்து தெரிவித்தார்.
மேலும் மனுதாரரின் கோரிக்கை மனு குறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் தகுதியின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரித்து, 12 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.