கொடைக்கானலில் அரியவகை மலபார் அணில்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
கொடைக்கானலில் அரியவகை மலபார் அணில்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களை மட்டுமின்றி, பறவை, வனவிலங்குகள் உள்ளிட்டவற்றையும் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். கொடைக்கானல் மலைப்பகுதியை பொறுத்தவரையில் 60 சதவீத பகுதிகள், வனப்பகுதியாக உள்ளது. இந்த வனப்பகுதிகளில் அரியவகை விலங்கினங்களும், பறவை இனங்களும் உள்ளன.
இந்தநிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் பறவை அணில் என்று அழைக்கப்படும் அரியவகை மலபார் அணில்கள் உள்ளன. இவை ஆங்காங்கே மட்டும் தென்பட்டு வந்தது. இதற்கிடையே தற்போது மலபார் அணில்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. குறிப்பாக கொடைக்கானல் நுழைவு வாயில் பகுதிகளான வெள்ளி நீர்வீழ்ச்சி, புலிச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மரங்களில் மலபார் அணில்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.
இந்த அணில்கள் சோலை மரங்களில் இருக்கும் கொட்டாப்பழம், ஜாமூன் பழங்களை உண்டு வாழ்ந்து வருகின்றன. மேலும் சோலை மரங்களில் இருந்து பழங்களை மலபார் அணில்கள் உண்பதால், அதன் எச்சம் மூலமாக மீண்டும் வனப்பகுதியை உருவாக்குகின்றன. மேலும் இந்த அணில்கள் மரங்களில் மட்டும் வாழ கூடியவையாகும். இதனால் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள், மரங்களில் தாவிக்குதிக்கும் மலபார் அணில்களை ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
ஆனால் கொடைக்கானல் வரும் வாகனங்கள் அதிக சத்தத்துடன் ஒலி எழுப்புகின்றன. இதனால் மலபார் அணில்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. எனவே இந்த விஷயத்தில் வனத்துறை உரிய நடவடிக்கை எடுத்து மலபார் அணில்களை பாதுகாக்க வேண்டும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.