மக்காச்சோளம் அறுவடை தீவிரம்

Update: 2023-01-03 16:15 GMT


உடுமலை, குடிமங்கலம் பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில் விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

மானாவாரி சாகுபடி

உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தற்போது வடகிழக்குப் பருவமழையை அடிப்படையாகக் கொண்டு மானாவாரியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கதிர்கள் அறுவடை நிலையை எட்டியுள்ளன. அதேநேரத்தில் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் விலை சரியத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கோழித்தீவன உற்பத்தியில் மக்காச்சோள பயன்பாடு அதிக அளவில் உள்ளது. இதனால் மக்காச்சோளத்துக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. அதேநேரத்தில் கோழித் தீவன உற்பத்தியாளர்களால் பீகார், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து மக்காச்சோளம் மொத்தமாக கொள்முதல் செய்யப்படும் போது உள்ளூர் சந்தைகளில் விலை குறைவு ஏற்படுகிறது. ஆனால் கடந்த சீசனில் அந்த மாநிலங்களில் மழை சேதம் உள்ளிட்ட காரணங்களால் மகசூல் குறைந்தது. இதனால் உள்ளூர் சந்தைகளில் மக்காச்சோளத்துக்கு நல்ல விலை கிடைத்து வந்தது.

ஆதார விலை

தற்போது நமது பகுதியில் அறுவடை தீவிரமடைந்ததால் வரத்து அதிகரித்து விலை குறையத்தொடங்கியுள்ளது. ஒரு குவிண்டால் ரூ.2,800 வரை விற்பனையான மக்காச்சோளம் தற்போது ரூ.2,300 ஆக குறைந்துள்ளது. தற்போதுதான் அறுவடை தொடங்கியுள்ள நிலையில் இன்னும் வரத்து அதிகரிக்கும் போது மேலும் விலை குறையக் கூடும் என்ற அச்சம் விவசாயிகளிடம் உள்ளது. மக்காச்சோள சாகுபடியில் உழவு முதல் அறுவடை வரை விதை, மருந்து, கூலி என ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவாகிறது. ஒரு ஏக்கரில் 30 குவிண்டால் வரை மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். மக்காச்சோளக் கதிர்களை எந்திரம் மூலம் அறுவடை செய்யும்போது தீவனத் தட்டு பெருமளவு சேதமடைந்து விடுகிறது.இதனால் கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்த முடியாமல் வீணாகிறது. எனவே கைகளால் அறுவடை செய்து பின்னர் எந்திரங்கள் மூலம் மணிகளைப் பிரித்தெடுக்கிறோம். இதன் மூலம் ஒரு ஆண்டுக்கு தேவையான கால்நடைத் தீவனத்தை இருப்பு வைத்துப் பயன்படுத்துகிறோம். நெல், கொப்பரை போன்றவற்றுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்து அரசு கொள்முதல் செய்கிறது. அதுபோல மக்காச்சோளத்தையும் கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்