வாழத்தகுந்த மாநகராக சென்னையை மாற்ற வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

வாழத்தகுந்த மாநகராக சென்னையை மாற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2024-05-21 06:27 GMT

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

சென்னை கோயம்பேட்டில் இயங்கி வந்த புறநகர் பஸ் நிலையம் வண்டலூர் - கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த இடத்தில் பெரிய பசுமைப் பூங்காவைப் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும். மாறாக வணிக வளாகம், திரையரங்குகள், அடுக்குமாடிக் குடியிருப்பு, ஐ.டி பார்க் போன்ற எதையும் அமைக்கக்கூடாது.

சென்னை மக்களை அச்சுறுத்தும் தொற்றா நோய் பேராபத்து, வெள்ளச் சேதம், நகர்ப்புற வெப்பத்தீவு, நீர்ப்பற்றாக்குறை உள்ளிட்ட பல சிக்கல்களுக்குத் தீர்வாக கோயம்பேடு பசுமைப் பூங்கா அமையும். கோயம்பேடு, அரும்பாக்கம், திருமங்கலம், முகப்பேர், விருகம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள். மேலும், மெட்ரோ ரெயில் மற்றும் மாநகரப் பஸ் வசதிகளுடன் கோயம்பேடு இணைக்கப்பட்டுள்ளதால் அதிக தொலைவில் உள்ள மக்களுக்கும் பயனாக இருக்கும்.

இந்தியாவிலும் உலகெங்கிலும் முன்னணி நகரங்கள் மிகப்பெரிய பொதுப் பூங்காக்களைக் கொண்டுள்ளன. அதுபோன்ற நல்வாய்ப்பு சென்னையில் இல்லை. சென்னை பூங்காக்களில் 20 ஏக்கர் பரப்பிலான செம்மொழிப் பூங்கா மற்றும் 15 ஏக்கர் பரப்பிலான அண்ணாநகர் கோபுரம் பூங்கா ஆகியன மட்டுமே பொது மக்கள் முழு அளவில் பயன்படுத்தத்தக்க பெரிய பூங்காக்கள் ஆகும்.

சென்னைப் பெருநகரில் புதிய பூங்காக்கள் உருவாக்குவதற்குப் போதுமான இடம் இல்லாத நிலையில், 36 ஏக்கர் பரப்பளவில் உள்ள கோயம்பேடு புறநகர்ப் பஸ் நிலையமும், 6.8 ஏக்கர் பரப்பளவில் உள்ள புறநகர தனியார் பஸ் நிலையமும் இடம் மாற்றப்பட்டுள்ளது ஒரு நல்வாய்ப்பு ஆகும். இவற்றில் மொத்தமுள்ள 42.8 ஏக்கர் நிலத்தில், மாநகர பஸ் நிலையத்திற்கான சுமார் 5 ஏக்கர் போக மீதமுள்ள பகுதியைப் புதிய பூங்காவாக உருவாக்க வேண்டும். இது சென்னை மாநகரின் பிராண்ட் மதிப்பை உயர்த்தும் ஒரு மிகச்சிறந்த அடையாளமாகவும் இருக்கும்.

எனவே, சென்னைப் பெருநகரில் பூங்காக்கள் உள்ளிட்ட பொதுவெளிகள் குறைந்து வரும் நிலைமையை மாற்றவும், பெருகிவரும் தொற்றா நோய்ப் பேராபத்தை எதிர்கொள்ளவும், சென்னையின் சுற்றுச்சூழலையும், உயிரிப்பன்மயத்தை காக்கவும், நீர்வளத்தை மேம்படுத்தவும், வெப்ப அலையை சமாளிக்கவும், வெள்ள பாதிப்பை குறைக்கவும், கோயம்பேடு வெளியூர் பஸ் நிலையப் பகுதிகளில் புதிய பூங்காவை அமைக்க வேண்டும். அதற்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசுஉடனடியாக வெளியிட வேண்டும்.

மேலும்,பொதுமக்களின் நடைப்பயிற்சிக்கும் உடலுழைப்புக்கும் உதவும் வகையிலுல் பாதுகாப்பானதாகவும், அனைவருக்குமானதாகவும், கட்டணமில்லாததாகவும், பசுமையானதாகவும் இப்பூங்காவை அமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். தமிழ்நாடு மற்றும் சென்னையின் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்.

வாழத்தகுந்த, செழிப்பான, சிறந்ததொரு சென்னை மாநகரை உருவாக்க துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நிலம், நீர், காற்று, சுற்றுச்சூழலை காக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு போர்க்கால வேகத்தில் மேற்கொண்டு அனைவருக்கும் வளமான ஒரு எதிர்காலத்தை உருவாக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்