அறுவடைக்கு தயாராகும் மக்காச்சோளம்
வத்திராயிருப்பு பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. விளைச்சல் நன்றாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வத்திராயிருப்பு
வத்திராயிருப்பு பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. விளைச்சல் நன்றாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மக்காச்சோள சாகுபடி
வத்திராயிருப்பு, அர்ச்சுனாபுரம், கான்சாபுரம், அத்தி கோவில், வ.மீனாட்சிபுரம், தாணிப்பாறை, சுந்தரபாண்டியம், கோட்டையூர், இலந்தைகுளம், தைலாபுரம், அக்கணாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு விளைச்சல் நன்றாக உள்ளதால் அதிக அளவு லாபம் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் விவசாயிகள் உள்ளனர். தற்போது மக்காச்சோளமானது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
தொடர்மழை
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள எண்ணற்ற பேர் விவசாயத்தை நம்பி தான் வாழ்ந்து வருகிறோம். வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் மக்காச்சோளத்தை சாகுபடி செய்தோம்.
கடந்த 2 ஆண்டுகளாக பெய்த தொடர் மழையால் இப்பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் உள்ள கண்மாய்களிலும், கிணறுகளிலும் விவசாயம் செய்வதற்கு போதுமான அளவில் தண்ணீர் இருந்தது. நீர்நிலைள், கண்மாய்கள், கிணற்று பாசனம் ஆகியவற்றில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி சோளத்தை பயிரிட்டோம்.
விலை அதிகரிப்பு
விவசாயத்திற்கு தேவையான அளவு தண்ணீர் இருந்ததால் தற்போது மக்காச்சோளம் நல்ல விளைச்சலை கண்டுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் மக்காச்சோளம் அறுவடை செய்யப்பட இருக்கிறது.
இங்குள்ள மக்காச்சோளம் விருதுநகர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்ய அனுப்பி வைக்கப்படுகிறது. நாங்கள் கடன் வாங்கி கடினப்பட்டு உழைத்தோம். எங்கள் உழைப்பிற்கு ஏற்ற கூலி கிடைத்துள்ளது. மக்காச்சோளம் நன்றாக விளைந்துள்ளதால் விலையும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் நாங்கள் உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.