தொடர் மழையால் மக்காச்சோளம் பாதிப்பு
மங்களூர் ஒன்றியத்தில் தொடர் மழையால் மக்காச்சோளம் பாதிப்பு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
மங்களூர் ஒன்றியத்தில்
தொடர் மழையால் மக்காச்சோளம் பாதிப்பு
நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
சிறுபாக்கம், நவ.15-
மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், பருத்தி, கடலை உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்வது வழக்கம். நடப்பாண்டில் 85 கிராமங்களில் 21 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த மாதம் சாகுபடி செய்த மக்காச்சோள பயிரில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டு மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. பூச்சி தாக்குதலில் இருந்து தப்பிய பயிர்கள் நன்கு வளர்ந்து கதிர் விடும் நிலையில் உள்ளது. ஆனால், கடந்த சில நாட்களாக காற்றுடன் பெய்த தொடர் மழையால், மக்காச்சோளம் பயிர் செடிகள் சாய்ந்தன. மேலும், வயல்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் தண்டுகள் அழுகும் நிலையில் உள்ளது. இதனால் மகசூல் இன்றி நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளதாக கவலை அடைந்துள்ள விவசாயிகள் மழையால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.