மகாளய அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு - மெரினா கடற்கரையில் திரளானோர் பங்கேற்பு

மகாளய அமாவாசையை முன்னிட்டு சென்னையில் மெரினா கடற்கரை, கோவில் தெப்பக்குளங்கள் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளில் பொதுமக்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

Update: 2023-10-15 13:40 GMT

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆடி, தை அமாவாசைகளில் திதி கொடுக்காதவர்கள் புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுப்பார்கள்.

மகாளய அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக பொதுமக்கள் நீர்நிலைகளில் குவிந்தனர். சென்னையில் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, திருவொற்றியூர் கடற்கரை பகுதி, மயிலாப்பூர் கபாலீசுவர் கோவில் தெப்பக்குளம் உள்ளிட்ட கோவில் தெப்பக்குளங்கள், நீர் நிலைகளில் நேற்று அதிகாலை முதலே பொதுமக்கள் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு, எள்ளுப்பிண்டம் வைத்து தர்ப்பணம் கொடுத்தனர். வழக்கத்தை விட நேற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் நீண்ட வரிசையில் காத்திருந்து தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த பின்னர், ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் ஆடைகளை தானமாக வழங்கினர்.

இதேபோல், மாநிலம் முழுவதும் குறிப்பாக கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் இடம், ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உள்ள அக்னிதீர்த்தக் கடல், திருச்சி- ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி கரை, தஞ்சை கும்பகோணம் மகாமக குளம், காவிரி படித்துறை, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கோடியக்கரை, திருவள்ளூர் மாவட்டம் வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் குளக்கரை மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நேற்று அதிகாலை முதல் தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு செய்தனர். விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஏராளமான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்