மதுரை ரெயில் தீ விபத்து; அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் ஆய்வு
விபத்தில் உயிர் தப்பிய பயணிகளை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சென்று சந்தித்தார்.;
மதுரை,
உத்தர பிரதேசத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தமிழகத்திற்கு வந்த சுற்றுலா ரெயிலில் மதுரை ரெயில் நிலையம் அருகே இன்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரெயிலில் சுற்றுலா பயணிகள் கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி சமையல் செய்தபோது, அது வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ரெயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து அமைச்சர் மூர்த்தி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். விபத்தில் உயிர் தப்பிய பயணிகள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் மதுரை ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மதுரை ரெயில் தீ விபத்து குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து விபத்தில் உயிர் தப்பிய பயணிகளை சந்தித்துப் பேசி, அவர்களிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார். இதனிடையே முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்ப தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.