நிரம்பி வரும் மதுரை மாடக்குளம் கண்மாய்

நிரம்பி வரும் மதுரை மாடக்குளம் கண்மாய்

Update: 2022-09-08 20:36 GMT


மதுரை மாடக்குளம் கண்மாய் வேகமாக நிரம்புகிறது. 45 ஆண்டுகளுக்கு பிறகு வாய்க்காலில் தண்ணீர் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தடுப்பணை

மதுரை மாடக்குளம் கண்மாய், மாநகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்த கண்மாய் 365 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு 167 மில்லியன் கனஅடி நீர் தேக்க முடியும். கடந்த காலங்களில் இந்த கண்மாய்க்கு, கொடிமங்கலம் வைகை ஆற்றில் இருந்து நேரடியாக வாய்க்கால் மூலம் தண்ணீர் வந்தது. ஆனால் நாளடைவில் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டது. அதேபோல் ஆற்றில் இருந்து வாய்க்காலில் தண்ணீர் பெற முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் மாடக்குளம் கண்மாய்க்கு, நிலையூர் கால்வாயில் இருந்து தண்ணீர் பிரித்து வழங்கப்பட்டது. அதனால் மாடக்குளம் கண்மாய்க்கு முழுமையாக தண்ணீர் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் கொடிமங்கலம் வைகை ஆற்றுப்பகுதியில் ரூ.19 கோடி செலவில் தடுப்பணை கட்டப்பட்டது. அதனால் கடந்த கால முறைப்படி மீண்டும் மாடக்குளம் வாய்க்காலில் தண்ணீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. அதற்காக 12.8 கிலோ மீட்டர் தூரம் உள்ள மாடக்குளம் கண்மாய் தூர்வாரப்பட்டது. மேலும் அங்கிருந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டன.

65 சதவீதம்

தற்போது வைகை ஆற்றில் முழு அளவில் தண்ணீர் செல்வதால் கடந்த 7-ந் தேதி மாடக்குளம் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கான விழாவில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் அன்புசெல்வம், உதவி செயற்பொறியாளர் அன்பரசு, உதவிபொறியாளர் சேகரன் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். சுமார் 45 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த வாய்க்காலில் தண்ணீர் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மாடக்குளம் கண்மாய் ஏற்கனவே தென்மேற்கு பருவமழை காரணமாக 35 சதவீதம் நிரம்பி இருந்தது. தற்போது வாய்க்காலிலும் தண்ணீர் செல்வதால் வேகமாக நிரம்பி வருகிறது.

இந்த வாய்க்கால் மூலம் தினமும் 250 கனஅடி நீர் கொண்டு செல்ல முடியும். ஆனால் தற்போது சோதனை அடிப்படையில் 100 கன அடி நீர் கொண்டு செல்லப்படுகிறது. கடந்த 2 நாட்களாக வாய்க்காலில் தண்ணீர் செல்வதால் தற்போது 65 சதவீதம் கண்மாய் நிரம்பி உள்ளது. வாய்க்காலில் இதே அளவு தண்ணீர் சென்றால் இன்னும் ஒரு வாரத்திற்குள் மாடக்குளம் கண்மாய் முழுமையாக நிரம்பி விடும் என்று அதிகாரிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்