சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூர் கோரிக்கை மதுரை ஐகோர்ட்டில் நிராகரிப்பு
சிலை கடத்தல் வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதை ஏற்க இயலாது என்றும், சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூர் கோரிக்கையை நிராகரித்தும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.;
சிலை கடத்தல் வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதை ஏற்க இயலாது என்றும், சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூர் கோரிக்கையை நிராகரித்தும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சிலை கடத்தல் வழக்கு
தமிழகம் உள்பட நாடு முழுவதும் பழமையான கோவில்களில் உள்ள ஏராளமான சிலைகளை திருடி வெளிநாடுகளில் விற்பனை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுபாஷ் சந்திரகபூர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
அந்த வகையில் கும்பகோணத்தில் சிலை கடத்தியது தொடர்பான வழக்கு அங்குள்ள கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் சாட்சிகளை மீண்டும் விசாரணை நடத்த கீழ்கோர்ட்டுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுபாஷ் சந்திரகபூர், மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை
அந்த மனுவில், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சிலை கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டேன். கும்பகோணம் மாவட்ட கோர்ட்டில் நடைபெறும் இந்த வழக்கில் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே விசாரித்த சாட்சிகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என கும்பகோணம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். ஆனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்து கும்பகோணம் கோர்ட்டு உத்தரவிட்டது.
எனவே சாட்சிகளை மீண்டும் விசாரிக்கும்படி கோரிய வழக்கை தள்ளுபடி செய்த கும்பகோணம் கோர்ட்டு உத்தரவை ரத்து செய்ய வேண்டும். எங்களது கோரிக்கையின்பேரில் சிலை கடத்தல் வழக்கின் சாட்சிகளை மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
தாமதப்படுத்துவதுதான் நோக்கம்
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் உரிய ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி சத்திகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது.
பின்னர் ஆஜரான அரசு வக்கீல், கீழ்கோர்ட்டில் நிலுவையில் உள்ள மனுதாரர் மீதான வழக்கில் கடந்த 5 வருடங்களாக சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கத்தில் சாட்சியங்களை மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் என மனுதாரர் மாறி, மாறி மனுவை தாக்கல் செய்து வருகிறார். சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றார்.
கோரிக்கையை ஏற்க இயலாது
விசாரணை முடிவில், அரசு வக்கீல் கூறியதைப்போல தன் மீதான வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதற்காக இந்த வழக்கை மனுதாரர் தொடர்ந்துள்ளார். இதில் தங்களது தரப்பு கருத்துகளை தெரிவிக்க கால அவகாசம் கோருகின்றனர்.
இதை ஏற்க முடியாது. இந்த வழக்கு விசாரணை வருகிற 27-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்று, மனுதாரர் தரப்பு வக்கீல்கள் ஆஜராகவில்லை என்றால், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படும். கும்பகோணம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையை தொடர உத்தரவிடப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.