ஆயுள் தண்டனையில் இருந்து விடுவித்தும் கூடுதலாக 9 மாதம் சிறையில் இருந்த கைதி-ரூ.3½ லட்சம் இழப்பீடு வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ஆயுள் தண்டனையை ரத்து செய்தும் சிறை நிர்வாகம் விடுவிக்காததால் 9 மாதங்கள் கூடுதலாக தண்டனை அனுபவித்தவருக்கு ரூ.3½ லட்சம் இழப்பீட்டு தொகையை வழங்க தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.;

Update: 2023-01-13 18:46 GMT

ஆயுள் தண்டனையை ரத்து செய்தும் சிறை நிர்வாகம் விடுவிக்காததால் 9 மாதங்கள் கூடுதலாக தண்டனை அனுபவித்தவருக்கு ரூ.3½ லட்சம் இழப்பீட்டு தொகையை வழங்க தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கூடுதல் தண்டனை அனுபவித்த கைதி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா, கீழ பூசனூத்து பகுதியை சேர்ந்த ரத்தினம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

ஒரு கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக மயில்ராஜ் என்பவரையும், 2-வது குற்றவாளியாக எனது மகன் சொக்கரையும் சேர்த்து போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கில் அவர்களுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த தண்டனையை எதிர்த்து மயில்ராஜ், மதுரை ஐகோர்ட்டில் அப்பீல் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, அவருக்கு விதித்த ஆயுள்தண்டனையை ரத்து செய்தது. அதுமட்டுமல்லாமல் அந்த வழக்கில் 2-வது குற்றவாளியான எனது மகன் மீது வேறு வழக்குகள் இல்லாதபட்சத்தில் அவரையும் விடுவிக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால் அதன்பேரில் எனது மகனை சிறை நிர்வாகம் விடுவிக்கவில்லை. இதுபற்றி நீண்டநாள் கழித்து தான் எங்களுக்கு தகவல் தெரிந்தது. பின்னர் இந்த தகவலை தெரிவித்ததன்பேரில் அவரை சிறை நிர்வாகம் 9 மாதங்கள் கழித்து விடுவித்தது.

சிறை நிர்வாகத்தின் கவனக்குறைவால் எனது மகன் 31.10.2019 முதல் 14.7.2020 வரை 9 மாதங்கள் தண்டனை அனுபவித்ததற்காக உரிய இழப்பீடு வழங்கவும், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

நடவடிக்கை

இந்த வழக்கு நீதிபதி சுந்தர்மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் ஹென்றி டிபென், கருணாநிதி ஆகியோர் ஆஜராகி, ஐகோர்ட்டு விடுதலை செய்ய உத்தரவிட்டும் உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளின் செயல் கண்டிக்கத்தக்கது என வாதாடினார்.

அரசு வக்கீல் மீனாட்சி சுந்தரம் ஆஜராகி, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதேபோல கைதிகள் தங்களின் வழக்கு விவரங்களை அறிந்து கொள்வதற்கு வசதியாக உரிய எந்திரம் பெரும்பாலான சிறைகளில் வைக்கப்பட்டு உள்ளன. அதில் ஆங்கிலத்தில் வழக்கு விவரங்களை அறியும் வசதி செய்யப்பட்டு உள்ளது. தமிழ் மொழியிலும் பயன்படுத்தும் வகையில் உரிய வசதிகள் செய்யப்பட உள்ளது என்றார்.

ரூ.3½ லட்சம் இழப்பீடு

விசாரணை முடிவில், தேவையில்லாமல் 9 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்த மனுதாரர் மகனுக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை இழப்பீடாக 3 வாரத்தில் தமிழக அரசு வழங்க வேண்டும். மனுதாரர் தரப்பினர், கூடுதல் இழப்பீடு கோருவதற்கு இந்த உத்தரவு தடையாக இருக்காது. இதுபோன்ற தவறுகள் நடக்காத வண்ணம் அனைத்து சிறைகளிலும், வழக்கு விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் வசதிகளை செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு, இந்த வழக்கை வருகிற 30-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்