வேறொருவரை காப்பாற்ற முயன்றபோது கரடி தாக்கி படுகாயம் அடைந்தவருக்கு வீரதீர விருது கோரி வழக்கு - அதிகாரி பரிசீலிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கரடியிடம் இருந்து வேறொருவரை காப்பாற்ற முயன்றபோது, கரடி தாக்கியதில் படுகாயம் அடைந்தவருக்கு வீர தீர செயல் விருது வழங்கக்கோரி ெதாடர்ந்த வழக்கில் அதிகாரி பரிசீலிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கரடியிடம் இருந்து வேறொருவரை காப்பாற்ற முயன்றபோது, கரடி தாக்கியதில் படுகாயம் அடைந்தவருக்கு வீர தீர செயல் விருது வழங்கக்கோரி ெதாடர்ந்த வழக்கில் அதிகாரி பரிசீலிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கரடி தாக்குதல்
தென்காசி மாவட்டம் பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியை சேர்ந்த மணிகண்டன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து 200 மீட்டர் தொலைவில் எங்கள் கிராமம் அமைந்துள்ளது. இதனால் இந்த பகுதிக்குள் வனவிலங்குகள் அடிக்கடி புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன.
இதுபோன்று வனவிலங்குகள் பாதிப்புகளை ஏற்படுத்தும் போதெல்லாம் கிராம மக்களின் இழப்புகளுக்கு இடைக்கால நடவடிக்கையாக கருணைத் தொகையை அரசு வழங்குகிறது.
இந்தநிலையில் கடந்த 6.11.2022 அன்று காலை 6 மணி அளவில் எனது தந்தை சைலப்பன் வேலைக்கு சென்றார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த வைகுண்டமணி என்பவரை கரடி தாக்கியதை கண்ட எனது தந்தை அவரைக் காப்பாற்ற அருகில் சென்றார். ஆனால் கரடி எனது தந்தையையும் கொடூரமாக தாக்கியது. இதில் எனது தந்தை ஒரு கண்ணை இழந்தார்.
தொடர் சிகிச்சை
கரடி தாக்கியதில் நுரையீரல் மற்றும் முகத்தின் தாடையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது வரையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
எனது தந்தையின் வருமானத்தை மட்டும் நம்பியே இருந்த எங்களது குடும்பத்தின் வாழ்வாதாரம் தற்போது மிகவும் பாதிப்படைந்துள்ளது.
எனவே, எனது தந்தைக்கு உயர்தர சிகிச்சையும், வீரதீர செயலுக்கான விருதும் வழங்க வேண்டும். மேலும் எங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும், ரூ.20 லட்சம் இழப்பீடும் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
அதிகாரிகளுக்கு உத்தரவு
இதேபோன்று பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சங்கர நாராயணனும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, இது போன்ற பாதிப்புக்கு ரூ.5 லட்சம் வரை இழப்பீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது, என்றார்.
இதனையடுத்து நீதிபதி, மனுதாரர்களின் மனுக்களை தமிழ்நாடு வனத்துறை செயலாளர் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.