சிறையில் உள்ள அண்ணன்-தம்பிக்கு ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
சிறையில் உள்ள அண்ணன்-தம்பிக்கு ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு;
மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்குமார். இவரது சகோதரர் சரவணன். இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்தது. ஒரே வீட்டில் இருவரின் குடும்பமும் வசிக்கிறது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாக தெப்பக்குளம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்பேரில் தெப்பக்குளம் போலீசார் இருவர் மீதும் தனித்தனியாக வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.இந்தநிலையில் இவர்களின் தாயார் நிர்மலா, நேற்றுமுன்தினம் மாலை 6 மணியளவில் இறந்துவிட்டதால் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் கார்த்திக்குமார், சரவணன் ஆகிய இருவரும் தனித்தனியாக அவசர மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதி தமிழ்செல்வி நேற்று விசாரித்தார். முடிவில், இந்த சகோதரர்களின் தாயார் இறந்து விட்டதால், அவருக்கு இறுதிச்சடங்குகளை நிறைவேற்றும் வகையில் மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.