பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கான இல்லம் தேடி கல்வி திட்டத்தில் முதலிடம் பிடித்த மதுரை மாவட்டம்

கொரோனா காலத்தில் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய மாணவ, மாணவிகளுக்கான இல்லம் தேடி கல்வி திட்டத்தில் மதுரை மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

Update: 2023-04-08 20:12 GMT


கொரோனா காலத்தில் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய மாணவ, மாணவிகளுக்கான இல்லம் தேடி கல்வி திட்டத்தில் மதுரை மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

இல்லம்தேடி

கொரோனா காலத்தில் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய மாணவ, மாணவிகளின் கல்வி இழப்பை சரிசெய்யும் வகையில் தமிழக அரசு இல்லம் தேடி கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதாவது, பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய இடைநின்ற மாணவர்கள் இருக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு கல்வி மையங்கள் அமைக்கப்படும். இந்த மையம் மாலை 5 மணி முதல் 7 மணி வரை மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்றுத்தரும். இந்த திட்டத்தில் மதுரை மேற்கு ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சியில் இந்த மையம் தொடங்கப்பட்டது. ஒரு மையத்துக்கு ஒரு தன்னார்வலர் நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலம் முழுவதும் 2 லட்சம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், மதுரை மாவட்டத்தில் மட்டும் 3931 தொடக்க நிலை மையங்களும், 2750 உயர் தொடக்க நிலை மையங்களும் என மொத்தம் 6,681 மையங்கள் உள்ளன.

இந்த மையங்களில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 415 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தொடக்கநிலை தன்னார்வலர்களுக்கு 7 கட்ட பயிற்சியும், உயர்தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு 5 கட்ட பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.

முதலிடம்

ஜூன் 2022-ல் வாசித்தல் மாரத்தானில் மதுரை மாவட்டம் தமிழக அளவில் சாம்பியன் பட்டம் வென்றது. இதில் அலங்காநல்லூர் ஒன்றியம் மாநில அளவில் 2-ம் இடமும், மேலூர் ஒன்றியம் மாநில அளவில் 3-ம் இடமும் பெற்றது. அத்துடன் தன்னார்வலர்களுக்கான மாநில அளவிலான கோப்பையை மதுரை மாவட்டம் வென்றது. அறிவிக்கப்பட்ட 6 பரிசுகளில் 4 பரிசுகள் மதுரை மாவட்டத்துக்கு கிடைத்தன. மாநில அளவில் சிறப்பாக செயல்பட்ட மேலூர் ஒன்றிய தன்னார்வலர் தஸ்லிமா நஸ்ரின் முதல்-அமைச்சரின் "நம்ம ஸ்கூல்" விருது பெற்றார். கடந்த மாதம் நடந்த குறும்பட கொண்டாட்ட நிகழ்வில் 15 ஒன்றியங்களில் இருந்தும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு குறும்படங்களை இயக்கி வெளியிட்டனர். இதில், ஒன்றிய அளவிலான தொடக்க நிலையினர் முதல் 3 இடங்களையும், உயர் தொடக்க நிலையில் முதல் 3 இடங்களை பெற்றனர். அவர்களில் இருந்து 2 நிலைகளிலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் இந்த திட்டமானது முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா மேற்பார்வையில், கல்வி மாவட்ட அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்