1900 ஏக்கர் நிலத்தையும் மீட்டு வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்

மதுரை ஆதீன மடத்தில் மேல் தளத்தில் உள்ள விடுதிக்கு சீல் வைத்து மீட்கப்பட்டது. இதுபோல் 1900 ஏக்கர் நிலத்தையும் மீட்டு அங்கு வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று மதுரை ஆதீனம் தேசிக பராமாச்சாரியார் கூறினார்.

Update: 2023-06-16 18:45 GMT

மதுரை ஆதீன மடத்தில் மேல் தளத்தில் உள்ள விடுதிக்கு சீல் வைத்து மீட்கப்பட்டது. இதுபோல் 1900 ஏக்கர் நிலத்தையும் மீட்டு அங்கு வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று மதுரை ஆதீனம் தேசிக பராமாச்சாரியார் கூறினார்.

மதுரை ஆதீனத்துக்கான சொத்துகள்

மதுரை ஆதீன மடத்துக்கு சொந்தமாக சிவகங்கை முக்குடி கிராமத்திலுள்ள 1900 ஏக்கர் தரிசு நிலத்தை புதுச்சேரியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு குத்தகை தொகை அடிப்படையில் 29 ஆண்டுக்கு முன்னாள் ஆதீனம் அருணகிரிநாதர் கொடுத்தார். 2010-ம் ஆண்டில் ஆதீன மடத்தின் மேல் தளத்தில் உள்ள 3200 சதுர அடி இடத்தை ரூ.41 ஆயிரம் மாத வாடகை அடிப்படையில் 27 ஆண்டுகளுக்கு குத்தகைக்கும், மடத்தின் அருகே 3540 சதுர அடி அளவுள்ள யானைக்கார சந்தையை 27 ஆண்டுகளுக்கு குத்தகைக்கும் அந்த நபருக்கே கொடுத்தார்.

இந்த 3 இடங்களையும் குத்தகைக்கு பெற்றதில் இருந்து இதுவரை குத்தகை பணமோ, வாடகை பணமோ அந்த நபர் கொடுக்கவில்லையாம். மேலும், அந்த சொத்துக்களை நிர்வகிப்பதற்கான பொது அதிகாரத்தையும் (பவர்) ஆதீனத்திடம் இருந்து பெற்றிருந்த அந்த நபர், 2020-ல் இறந்துவிட்டார்.

அதன்பின்னர் அந்த சொத்துக்களை அவரது மகன் நிர்வகித்து வருகிறார். இதற்கிடையில் 2021-ம் ஆண்டு ஆதீனம் அருணகிரிநாதர் இறந்துவிட்டார்.

பின்னர் புதிய ஆதீனமாக ஹரிஹர தேசிக பரமாச்சாரியார் பொறுப்பேற்ற உடனேயே மடத்தின் சொத்துக்களை மீட்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

விடுதிக்கு சீல் வைத்து மீட்பு

அவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்த நிலையில் 2022-ம் ஆண்டு ஆதீன மடத்திற்கு சாதமாக தீர்ப்புகள் வந்தன. அதில் சொத்தை மடத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

சொத்துக்களை நிர்வகிப்பவர் தரப்பில் மேல் முறையீடு செய்து அந்த உத்தரவுக்கு தடை வாங்கிய நிலையில், சொத்துக்களை மீட்டு தருமாறு இந்து சமய அறநிலையத்துறையிடம் ஆதீன மடம் கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில் மடத்தின் மேல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள விடுதியை மீட்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தொடங்கினர். மேலும் மடத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.25 லட்சம் நிலுவை தொகையை 2 வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. அதனை குத்தகைக்கு எடுத்தவர்கள் செலுத்தாததால் சொத்தை கைப்பற்றும் பணியில் அறநிலைத்துறை ஈடுபட்டது.

அதன்படி நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் செல்வி தலைமையில் அதிகாரிகள் மற்றும் கோர்ட்டு அலுவலர்கள் அங்கு சென்றனர். அவர்கள் விடுதியில் உள்ள பொருட்களை வெளியே வைத்து விட்டு கட்டிடத்துக்கு சீல் வைத்து, நோட்டீஸ் ஒட்டினர். இதன் மூலம் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான சொத்து மீட்கப்பட்டது.

வேளாண் பல்கலைக்கழகம்

இதை தொடர்ந்து மதுரை ஆதீனம் நிருபர்களிடம் கூறியதாவது:- முந்தைய ஆதீனத்தை ஏமாற்றி சொத்துக்களை அபகரித்துள்ளனர். இந்த சொத்தை மீட்டது போலவே சிவகங்கையில் உள்ள 1900 ஏக்கர் நிலத்தையும் மீட்டு, அங்கு வேளாண் பல்கலைகழகம் அமைக்க வேண்டும். பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். மோடி 3-வது முறையாகவும் பிரதமராக வரலாம். அவருடைய தமிழ் உணர்வு அதற்கு பயன்படும். அவர் பிரதமராக வர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். அவர் இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டி கொடுத்ததை பாராட்ட வேண்டும் எனும் நோக்கில்தான் செங்கோல் கொடுத்தேன்.

தமிழ்நாட்டை தமிழரே ஆள வேண்டும். அதுபோல இந்தியாவையும் தமிழர்கள் ஆளலாம். நான் எந்த அரசியல் கட்சியின் பிரசாரத்திற்கும் போக மாட்டேன். யார் வந்தாலும் வாழ்த்து சொல்வேன். நடிகர்கள் அரசியலுக்கு வருவதை பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆதீன மடாதிபதியாக இருப்பது முள் மேல் இருப்பது போலிருக்கிறது. ஏன் வந்தோம் என தோன்றுகிறது. எனக்கு பிடிக்கவில்லை. சிறு வயதில் இருந்தே பல்வேறு மடங்களிலும் ஆக்கிரமிப்புகளை மீட்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்