ரேஸ் கிளப்புக்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்தை மீட்கவேண்டும்; தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
வாடகைத்தொகை ரூ.730 கோடியை ஒரு மாதத்துக்குள் செலுத்தாவிட்டால், கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு வழங்கப்பட்ட குத்தகை நிலம் சுமார் 160 ஏக்கரை தமிழ்நாடு அரசு மீட்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
160 ஏக்கர் குத்தகை
சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு, கடந்த 1945-ம் ஆண்டு 160 ஏக்கர் 86 செண்ட் நிலம் 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் அரசு வழங்கியது. இந்த குத்தகைக்காலம் வரும் 2044-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதியுடன் முடிவடைகிறது.
இந்த நிலத்தை குத்தகைக்கு விடும்போது ஆண்டுக்கு 614 ரூபாய் 13 காசு வாடகையாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த 1970-ம் ஆண்டு டிசம்பர் 18-ந்தேதி முதல் இந்த வாடகையை உயர்த்துவது தொடர்பாக விளக்கமளிக்கும்படி மாம்பலம் - கிண்டி வட்டாட்சியர் நோட்டீஸ் பிறப்பித்தார். ஆனால் அதற்கு பதிலளித்த மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம், வாடகையை உயர்த்துவது தொடர்பாக கடந்த 1945-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தில் எந்தப்பிரிவும் சேர்க்கப்படவில்லை எனத்தெரிவித்தது.
பணக்காரர்கள் விளையாட்டு
இதை ஏற்க மறுத்த தமிழ்நாடு அரசு, 1970-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்துக்கு வாடகை பாக்கித்தொகையாக ரூ.730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297-ஐ செலுத்தும்படி நோட்டீஸ் பிறப்பித்தது. இந்த நோட்டீஸை எதிர்த்து மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் பிறப்பி்த்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வசதி படைத்த பணக்காரர்கள் குதிரைகள் மீது பெரிய தொகையை பந்தயம் கட்டி விளையாடுவதற்காக மாநகரின் மையப்பகுதியில் சுமார் 160 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது அங்கு நடைபெறும் செயல்களில் எந்தப்பொதுநலனும் இல்லை.
கொள்கை முடிவு
அந்த நிலத்தை மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் உள் வாடகைக்கு விட்டு பெரும் தொகையை சம்பாதித்து வருகிறது. எனவே, இந்த நிலத்தை மீட்டு தமிழ்நாடு அரசு ஏழை, எளிய மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் வளர்ச்சித்திட்டங்களுக்காக பொதுநல நோக்கில் பயன்படுத்தலாம்.
அரசு நிலங்களின் குத்தகையை உயர்த்துவதும், பொதுநலனுக்காக வழங்கப்பட்ட குத்தகையை ரத்து செய்வதும் அரசின் கொள்கை முடிவு தொடர்புடையது. அந்த முடிவு சட்டவிரோதமானது எனக்கூறமுடியாது. பொதுநலனை உறுதி செய்யும் நோக்கிலும், தமிழ்நாடு அரசின் நிதிப் பற்றாக்குறை மற்றும் நிதிச்சுமையை கருத்தில் கொண்டும் தமிழ்நாடு முழுவதும் குத்தகைக்கு விடப்பட்டுள்ள அரசு நிலங்களின் குத்தகை வாடகையை மறுஆய்வு செய்யவேண்டும்.
மீட்கவேண்டும்
குத்தகைக்கு விடப்பட்ட நிலமாக இருந்தாலும் சந்தை மதிப்பின் அடிப்படையில் வாடகையை உயர்த்த தமிழ்நாடு அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. எனவே, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட நோட்டீசின்படி செலுத்த வேண்டிய ரூ.730.86 கோடி வாடகை பாக்கியை ஒரு மாதத்துக்குள் தமிழ்நாடு அரசுக்கு மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் செலுத்தவேண்டும். தவறும்பட்சத்தில் மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் வசம் உள்ள 160 ஏக்கர் நிலத்தை போலீஸ் உதவியுடன் மீட்டு, அந்த நிலத்தை பொதுநலனுக்காக பயன்படுத்தவேண்டும். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட இந்த குத்தகையை தமிழ்நாடு அரசு கட்டாயம் மறுஆய்வு செய்திருக்கவேண்டும்.
அதிகாரிகளின் மெத்தனம்
ஆனால் மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகத்தில் உள்ளவர்கள் வசதி படைத்தவர்கள் மட்டுமின்றி அதிகாரம் படைத்தவர்களாகவும் இருப்பதால் அரசு அதிகாரிகள் அரசுக்கு வரவேண்டிய கோடிக்கணக்கான நிலுவைத் தொகையை வசூலிப்பதில் நிதானமாகவும், மெத்தனப்போக்குடனும் நடந்து கொண்டுள்ளனர். இது துரதிருஷ்டவசமானது.
இந்த விவகாரத்தில் அதிகாரிகளும் உடந்தையாக செயல்படுகின்றனரோ? என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, கடந்த 2004-ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான காலக்கட்டத்துக்கு உயர்த்தப்பட்ட வாடகை பாக்கித்தொகை தோராயமாக ரூ.12 ஆயிரத்து 381 கோடியே 35 லட்சத்து 24 ஆயிரத்து 269-ஐ 2 மாதங்களில் செலுத்தக்கோரி மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு அரசு மீண்டும் புதிதாக நோட்டீஸ் அனுப்பவேண்டும். சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து இந்தத்தொகையை வசூலி்க்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.