வழக்குப்பதிவு செய்வதற்கு லஞ்சம் கேட்ட காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
வழக்குப்பதிவு செய்வதற்கு லஞ்சம் கேட்ட காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறை துணை ஆணையருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
வழக்குப்பதிய லஞ்சம் கேட்ட காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறை துணை ஆணையருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சுதாகர் என்பவர், தன்னுடைய நண்பர் ரூ.2 லட்சம் கடனாகப் பெற்று திருப்பித் தராமல் ஏமாற்றி விட்டதாக புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புகாரளித்தார். இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு ரூ. 1 லட்சம் லஞ்சம் கேட்டதாக காவல் நிலைய ஆய்வாளர் பீர் பாக்ஷா மற்றும் உதவி ஆய்வாளர் குணசேகரன் ஆகியோருக்கு எதிராக வண்ணாரப்பேட்டை துணை ஆணையரிடம் புகாரளித்திருக்கிறார்.
மேலும் லஞ்சம் பெற்றதற்கான வீடியோ ஆதாரங்களுடன் தமிழக டிஜிபி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடமும் புகார் கொடுத்திருக்கிறார். இந்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சுதாகர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ் குமார், ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் மீதான புகார் குறித்து விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வண்ணாரப்பேட்டை துணை ஆணையருக்கு உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்திருக்கிறார்.