நிலுவை வழக்குகளை சமரச தீர்வு காண சென்னை ஐகோர்ட்டு நீதிபதி அறிவுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் நிலுவை வழக்குகளை சமரச தீர்வு காண சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சுந்தர் அறிவுறுத்தினார்.

Update: 2023-07-29 18:56 GMT

நிலுவை வழக்குகள்

புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில சமரச மையம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சமரச மையம் இணைந்து சமரச தீர்வு முறையை மேம்படுத்தும் விதமாக முத்தரப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதியும், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாக பொறுப்பு நீதிபதியுமான சுந்தர் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு சமரச தீர்வின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பாகப்பிரிவினை வழக்குகள் அதிகமாக நிலுவையில் இருப்பது குறித்தும், மத்தியஸ்தர்கள் மற்றும் வக்கீல்களின் முக்கியத்துவம் குறித்தும், மேலும் கோர்ட்டுகளில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்குகளை சுமுகமாகவும், தரப்பினர்களுக்கு திருப்தியாகவும் முடிவு காண சமரச தீர்வு மிகச்சிறந்த வழி என்பதை அவர் வலியுறுத்தினார்.

நீதிபதிகள்

நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி நாராயணன் தலைமை தாங்கினார். மாநில சமரச மையத்தின் மூத்த பயிற்றுனர் விஜயகமலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் நீதிபதிகள், வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் கூடுதல் மாவட்ட நீதிபதி வசந்தி வரவேற்று பேசினார். முடிவில் மாவட்ட சமரச மையத்தின் ஒருங்கிணைப்பாளரும், மூத்த சிவில் நீதிபதியுமான ராஜேந்திர கண்ணன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்