செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு முடிவெடுக்கட்டும்: ஆட்கொணர்வு மனுவை முடித்துவைத்தது ஐகோர்ட்டு

அமலாக்கத்துறை காவல் குறித்து சுப்ரீம் கோர்ட்டு முடிவெடுக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Update: 2023-07-25 09:24 GMT

சென்னை,

செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அமர்வு மனுவை விசாரித்தது.

செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவும், அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் ஆஜராகினர்.

இதில், செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கை வேறு நாளுக்கு ஒத்திவைக்கலாம் என வழக்கறிஞர் இளங்கோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுக்க அதிகாரம் இல்லை என்ற தனது தீர்ப்பில் உறுதியாக உள்ளதாக நீதிபதி நிஷா பானு தெரிவித்தார்.

அத்துடன், இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு கையில் எடுத்தபின், நாங்கள் ஏன் வழக்கை நிலுவையில் வைத்திருக்க வேண்டும் என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அனைத்து அம்சங்களையும் சுப்ரீம் கோர்ட்டு முடிவெடுக்கும் போது, இந்த வழக்கை முடித்துவைக்கலாம் என்றும், சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கில் முடிவெடுக்கட்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, வழக்கை சென்னை ஐகோர்ட்டு முடித்துவைத்தது. அத்துடன், செந்தில் பாலாஜி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்