மாதவரம் பால் பண்ணை பூங்கா- அருங்காட்சியகம் அமைக்கப்படும்; பால்வளத்துறை அமைச்சர் தகவல்
காஞ்சீபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிதாக காஞ்சீபுரம் செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் உருவாக்கப்படும் என்றும், பால் உற்பத்தியின் பல்வேறு கூறுகளை இளைய சமுதாயம் அறிந்து கொள்ள ஏதுவாக மாதவரம் பால் பண்ணை பூங்கா மற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் நாசர் கூறினார்.;
சென்னை,
கலைஞர் சங்க பணியாளர்கள் நல நிதி உருவாக்கப்படும். சங்க பணியாளர் விபத்து காரணமாக இறக்க நேரிட்டால் ரூ.5 லட்சம் இழப்பீடும், அதிகபட்சமாக தலா 2 குழந்தைகளுக்கு ரூ.25 ஆயிரம் உயர்கல்வி உதவித்தொகை, திருமணத்திற்கு தலா ரூ.30 ஆயிரம் இந்த நிதியில் இருந்து வழங்கப்படும். பால் உற்பத்தியாளர்களுக்கு வங்கி கடன் மூலம் ரூ.2 லட்சம் புதிய கறவை மாடுகள் வாங்க ஆவின் பால்பெருக்கு திட்டம் செயல்படுத்தப்படும்.
ஆவின் இணைய பால் பண்ணைகளில் பால் பாக்கெட்டுகள் தயாரித்து கையாளும் பணி ரூ.30 கோடி செலவில் தானியங்கி எந்திரம் நிறுவுவதன் மூலம் நவீனப்படுத்தப்படும்.
கண்காட்சி
அண்ணா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நலநிதி பணிகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும். ஒரு லட்சம் பேருக்கு தேசிய பால் பண்ணை மேம்பாட்டு திட்டம் ரூ.4.52 கோடி மதிப்பில் மாதவரம் திறன் மேம்பாட்டு பயிற்சி, சேலம், மதுரை ஒன்றிய பயிற்சி மையங்கள் மூலம் அளிக்கப்படும். தேசிய பால் பண்ணை வர்த்தக கண்காட்சி நடத்தப்படும். மாதாந்திர பால் அட்டை விற்பனை மற்றும் புதுப்பிக்கும் பணிகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும். ஆவின் ஓய்வூதிய குடும்ப பாதுகாப்பு நிதி உருவாக்கப்படும்.
கிராமப்புறங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்களின் கறவை மாடுகள் திடீரென்று இறப்பதால் பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதை தடுக்க நடப்பு ஆண்டில் ரூ.5 லட்சம் கறவைகளுக்கு 50 சதவீத மானியத்தில் காப்பீடு செய்யப்படும். தமிழ்நாடு பால் உற்பத்தி மேலாண்மை கொள்கை உருவாக்கப்படும். அதற்கான சட்டம் உருவாக்கப்படும்.
பசுந்தீவன புல் விதைகள்
இணையம் மற்றும் மாவட்ட ஒன்றியங்களில் காலியிடங்கள் மற்றும் கட்டிடத்தின் சூரிய சக்தி மின் தகடுகள் பொருத்தப்பட்டு, மின்சாரம் தயாரிக்கப்படும். புதிய திட்டங்களை செயல்படுத்த ஆவின் நிறுவனம் மூலம் புதிய 8 பிரிவுகள் உருவாக்கப்படும். புதிய சாக்லெட் உற்பத்தி அலகு அம்பத்தூர் பால் பண்ணை வளாகத்தில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
புதிய பால் உற்பத்தியாளர் ஒன்றியம்
காஞ்சீபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிதாக காஞ்சீபுரம் செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் உருவாக்கப்படும். இதேபோல் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் உருவாக்கப்படும். நவீன பாலகங்கள் ரூ.2.5 கோடி மதிப்பீட்டிலும் சென்னையில் 30 பாலகங்கள் புனரமைப்பு பணிகள் ரூ.10 லட்சம் மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாட்டில் பால்வளத்துறையின் தொடக்கம், பால் உற்பத்தியின் பல்வேறு கூறுகளை இளைய சமுதாயம் அறிந்து கொள்ள ஏதுவாக மாதவரம் பால் பண்ணை பூங்கா மற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.