மடப்பட்டு ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்
பணிகளை முறையாக செய்யாத மடப்பட்டு ஊராட்சி செயலாளரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.;
உளுந்தூர்பேட்டை,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மடப்பட்டு ஊராட்சியில் கூட்ட அறிவிப்பு பதிவேடு, தீர்மான பதிவேடு உள்ளிட்ட அனைத்து பதிவேடுகளையும் முறையாக பராமரிக்கவில்லை. மேலும் தீர்மான செலவு சீட்டுகள் இல்லாமல் செலவு செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. இது தொடர்பான புகார்கள் கலெக்டருக்கு சென்றது. இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மஞ்சுளா அந்த ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் மேற்கண்ட குற்றச்சாட்டுகள் உண்மை என தெரிந்தது. தொடர்ந்து இது தொடர்பான அறிக்கையை திட்ட இயக்குனர் மஞ்சுளா கலெக்டரிடம் அளித்தார். அதன்அடிப்படையில் கலெக்டர் ஷ்ரவன்குமார் மடப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜனார்த்தனன் மற்றும் துணைத் தலைவர் சத்தியகீர்த்தி ஆகியோரது செக் பவரை பறித்து உத்தரவிட்டார். மேலும் தலைவர் மற்றும் துணைத் தலைவர் இருவருக்கும் பதிவேடுகளை முறையாக பராமரிக்காதது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார். இது தவிர ஊராட்சி பணிகளையும், கணக்குகளையும் சரிவர செய்யாத ஊராட்சி செயலாளர் ராஜேந்திரசோழனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவிட்டார்.