கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளுடன் தடுப்புகளை உடைத்து சென்ற சொகுசு கார்
வாணியம்பாடி அருகே 4 ஆயிரம் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை கடத்தி வந்த சொகுசு கார் போலீசாரை பார்த்ததும் சினிமா காட்சி போல தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்றது. 30 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று வனப்பகுதியில் போலீசார் காரை மடக்கினர்.
தடுப்புகளை உடைத்து சென்ற கார்
கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை சொகுசு காரில் கடத்தி வருவதாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையில், வாணியம்பாடியில் உள்ள சோதனை சாவடியில் தடுப்புகள் அமைத்து அந்தவழியாக வரும் வாகனங்களை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த ஒரு சொகுசு கார் சினிமாவில் நடப்பதை போல போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்றது. அந்த காரை போலீசார் விரட்டி பிடிக்க முயன்றனர். மேலும் அந்த சொகுசு கார் ஆம்பூர், பேரணாம்பட்டு வழியாக சென்றதால் இதுகுறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தப்பி ஓட்டம்
இதனை தொடர்ந்து வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட எல்லைப்பகுதியான மாச்சம்பட்டு பகுதியில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் தடுப்புகளை வைத்து காரை மடக்க முயன்றனர். அதையும் உடைத்துக்கொண்டு அந்த கார் சென்றது.காரில் இருந்த நபர்கள் கொத்தூர் பகுதியில் உள்ள வனப்பகுதி வழியாக சென்று அங்கு வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலத்தில் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
30 கிலோ மீட்டர் தூரம்
இதனை தொடர்ந்து மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் மற்றும் உமராபாத் போலீசார் காரை சோதனை செய்ததில் 4 ஆயிரம் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காருடன், மது பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
30 கிலோ மீட்டர் தூரம் போலீசாருக்கு போக்குகாட்டி, காரை நிறுத்திவிட்டு மர்மநபர்கள் தப்பி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.