ரூ.2¼ லட்சம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல்; 3 பேர் கைது
நாகூரில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2¼ லட்சம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.1¼ லட்சம் ரொக்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.
நாகூர்:
நாகூரில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2¼ லட்சம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.1¼ லட்சம் ரொக்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.
ரகசிய தகவல்
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரிலும், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் அறிவுறுத்தல் படியும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு நாகூர் தெத்தி சமரசம் நகரில் உள்ள ஒரு வீட்டில் லாட்டரி சீட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
3 பேரை பிடித்து விசாரணை
அதன்பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை பிடித்து நாகூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்ட 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரனணயில் அவர்கள் தெத்தி சமரசம் நகரை சேர்ந்த முஜிபு ரகுமான் (வயது 53), திருவாரூர் பெரிய மில் தெருவை சேர்ந்த முருகன்(55), தெத்தி ஜம்மியத் நகரை சேர்ந்த ஜெய்லானி(62) என்பதும், இவர்கள் 3 பேரும் தெத்தி சமரசம் நகரில் உள்ள ஒரு வீட்டில் லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
கைது
இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முஜிபு ரகுமான், முருகன், ஜெய்லானி ஆகிய 3 பேரையும் ைகது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 390 ரொக்கம் மற்றும் ரூ.2 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளையும், 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், நாகூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று பறிமுதல் செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் பணத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உடன் இருந்தனர்.