போதிய ஆர்டர்கள் இல்லாததால் வருமானம் பாதிப்பு:கையறு நிலையில் கயிறு தயாரிக்கும் தொழில்

போதிய வருமானம் இல்லாததால் கையறு நிலையில் கயிறு தயாரிக்கும் தொழில் உள்ளதாக தொழிலாளர்கள் உள்ளதாக தொழிலாளர்கள் வேதனையில் உள்ளனர்.;

Update: 2023-01-25 23:10 GMT

இரும்பாலை:

கயிறு தயாரிக்கும் தொழில்

சேலம் இரும்பாலை, அழகுசமுத்திரம், கே.ஆர். தோப்பூர், கருக்கல்வாடி, எல்லாயூர், செம்மண் கூடல், முத்துநாயக்கன்பட்டி, ஓலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் குடிசை தொழிலாக கயிறு தயாரிக்கும் தொழில் செய்து வருகின்றனர். பெரும்பாலானோர் வீடுகளில் எந்திரம் மூலம் கயிறு தயாரிக்கின்றனர்.

கயிறு தயாரிப்பதற்கான மூல பொருளான நார், பொள்ளாச்சி பகுதியில் இருந்தும், தென்னை மட்டை பட்டுகோட்டையில் இருந்தும் வாங்கி வரப்படுகிறது. பின்னர் எந்திரம் மூலம் கயிறு தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கும் கயிறுகள் கட்டிட பணிகளில் சாரம் கட்டுதல், தொங்கு கயிறு, நீர் இறக்க பயன்படும் கயிறு, பார்சல்களை கட்டும் கயிறு போன்றவற்றை இவர்களிடம் இருந்து உள்ளூர் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

கையறு நிலை

மேலும் இங்கு தயாரிக்கப்படும் கயிறுகள் மராட்டியம், ஆந்திரா, கர்நாடகம், உத்தரபிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கயிறுகள் குறைந்த விலைக்கு வாங்கப்படுவதால் போதிய வருமானம் கிடைக்கவில்லை என்றும், கையறு நிலையில் இந்த தொழில் உள்ளதாகவும் தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் கூறிய கருத்துக்கள் விவரம் வருமாறு:-

இரும்பாலை பகுதியை சேர்ந்த ரவி:-

சேலம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கயிறு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஆரம்பத்தில் இந்த தொழிலை எந்திரம் இல்லாமல் செய்து வந்தோம். தற்போது எந்திரம் மூலம் கயிறு தயாரிக்கப்பட்டு வருகிறது. நார்களை மொத்தமாக பொள்ளாச்சியில் இருந்து வாங்கி வருகிறோம். 35 கிலோ எடை கொண்ட நார்களை ரூ.400-க்கு வாங்கிறோம். கயிறு தயாரிக்கும் போது 5 கிலோ வரை நார் வீணாகுகிறது. முடிவில் 35 கிலோ எடை கொண்ட கயிறு ரூ.700 முதல் 750 வரை தான் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை மிகவும் குறைவானது ஆகும். கயிறுகளை அதிக நாட்கள் வைக்க முடியாது. ஏனென்றால் அதன் மூலம் எடை குறைய வாய்ப்புள்ளதால் விலை பற்றி நினைக்காமல் உடனுக்குடன் விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். இதனால் எங்களுக்கு இந்த தொழிலில் போதிய வருமானம் கிடைப்பதில்லை. கயிறுக்கு உரிய விலையை நிர்ணம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின்கட்டணம் உயர்வு

அழகுசமுத்திரம் பகுதியை சேர்ந்த செல்வகுமார்:-

ஒரு தொழிலாளி காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை பார்த்தால் தான் 60 கிலோ வரை கயிறு தயாரிக்க முடியும். இதன்மூலம் அவர்களுக்கு கூலியாக ரூ.350 வரை கிடைக்கிறது. எங்களது மில்லில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 20 தொழிலாளர்கள் வரை வேலை பார்த்து வந்தனர். தற்போது தொழிலில் வருமானம் இல்லாததாதல் ஆட்கள் குறைக்கப்பட்டு விட்டனர். மின்சார கட்டண உயர்வால் தொழிலில் நஷ்டம்தான் ஏற்படுகிறது. கயிறுகளுக்கு போதிய விலையும் கிடைப்பது இல்லை. எனவே எங்களது தொழிலை பாதுகாக்க அரசு மின்கட்டணம் போன்றவற்றில் சலுகைகளை வழங்க வேண்டும்.

ஆர்டர்கள் குறைந்தன

இரும்பாலை பகுதியை சேர்ந்த பவித்ரா:-

கயிறு தயாரிக்கும் தொழிலில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டு வருகிறேன். கொரோனா காலத்தில் இந்த தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது வருமானம் இல்லாமல் குடும்பம் நடத்தவே மிகவும் சிரமம் அடைந்தோம். தற்போது தொழில் இருந்தாலும் அதில் போதிய அளவு வருமானம் கிடைப்பதில்லை. இதற்கு காரணம் கயிறு அதிக விலைக்கு வாங்கப்படுவது இல்லை. முன்பெல்லாம் கயிறு திரிப்பதற்கு அதிகளவு ஆர்டர்கள் வந்தன. அதன்மூலம் தினமும் எங்களுக்கு வேலை இருந்தது. தற்போது ஆர்டர்கள் குறைந்துள்ளன. இதுவும் வருமானம் இல்லாததற்கு முக்கிய காரணம் ஆகும். எனவே அரசு பல தொழில்களுக்கு வழங்கும் சலுகைகள் போல் எங்கள் தொழிலுக்கும் சலுகை வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

சித்தனூர் பகுதியை சேர்ந்த மொத்த கயிறு வியாபாரி விஜயன்:-

சேலம் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் கயிறு உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. தற்போது ஒரு கிலோ கயிறு ரூ.18 வரை தான் விற்கப்படுகிறது. கயிறுக்கு மாற்றாக 100-க்கும் மேற்பட்ட பொருட்கள் வந்துவிட்டன. இதனால் அதனை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவது குறைந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு தற்போது 5 டன் வரை அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும் வட மாநிலங்களிலும் பலர் கயிறு தயாரிக்கும் எந்திரம் மூலம் தயாரிப்பதாலும் நம்முடைய கயிறுக்கு மவுசு குறைந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்