சூளகிரி அருகே சாலையின் நடுவே லாரி கவிழ்ந்து விபத்து - 3 பேர் காயம்
சூளகிரி அருகே சாலையின் நடுவே லாரி கவிழ்ந்த விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.;
சூளகிரி,
கர்நாடக மாநிலம் சிந்தாமணியில் உமி பாரத்தை இறக்கிவிட்டு லாரி ஒன்று, மீண்டும் இன்று கிருஷ்ணகிரி நோக்கி திரும்பியது. லாரியை கிருஷ்ணப்பா என்பவர் ஓட்டிச்சென்றார்.
ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பவர்கிரீட் அருகே லாரி சென்றபோது, லாரியின் முன்பக்க டயர் தனியாக கழன்று சாலையில் ஓடியது. இதனால் லாரி நிலை தடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக டிரைவர் கிருஷ்ணப்பா மற்றும் கூலித்தொழிலாளிகள் 2 பேர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.
இச்சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கவிழ்ந்து கிடந்த லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.