எல்லாபுரம் ஒன்றியத்தில் லாரி டிரைவர் வெட்டிக்கொலை
எல்லாபுரம் ஒன்றியத்தில் லாரி டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் அக்கரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஏரியில் கடந்த சில நாட்களாக சவுடு மண்குவாரி இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த டிரைவர்களான பிரகாஷ் (வயது 31), சூர்யா (29) ஆகியோர் சவுடு மண் எடுக்க குவாரிக்கு வந்தனர். அப்போது மண் ஏற்றிக் கொண்டு 2 லாரிகளும் வெளியே வரும் போது இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில், ஆத்திரம் அடைந்த சூர்யா தனது லாரியில் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து வந்து பிரகாஷை சரமாரியாக வெட்டினார். இதில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
இவர்களுக்குள் ஏற்பட்ட மோதலை கண்டு அருகில் இருந்த டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் அலறி ஓடினர். சம்பவ இடத்துக்கு ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் தலைமையில் பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். படுகொலை செய்யப்பட்ட பிரகாஷ் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
படுகொலை செய்யப்பட்ட பிரகாஷ் மீது லாரியை வழி மறித்து கொள்ளையடித்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். பணம் மற்றும் நகைகள் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையா? அல்லது வேறு ஏதாவது பிரச்சினையா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் இந்த கொலை சம்பவம் குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். தலைமறைவான சூர்யாவை வலை வீசி தேடி வருகின்றனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சூர்யாவுக்கும்-பிரகாசுக்கும் இடையே பணம் மற்றும் நகைகள் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை கடந்த சில நாட்களாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சூர்யாவின் பூர்வீகம் கிருஷ்ணாபுரம் கண்டிகை என்றும் பிரகாசுடன் ஏற்பட்ட பழக்கத்தால் சூர்யா தனது குடும்பத்துடன் ஆத்துப்பாக்கம் கிராமத்துக்கு குடி பெயர்ந்து வந்தது தெரியவந்துள்ளது. ஆனால் நண்பர்கள் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த கொலை சம்பவத்தால் அக்கரப்பாக்கம் ஏரியில் சவுடு மண் குவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.