ஸ்கூட்டர் மீது லாரி மோதி தாய்-மகன் பலி

தஞ்சையில், ஸ்கூட்டர் மீது லாரி மோதியதில் தாய்-மகன் பரிதாபமாக பலியானார்கள். படுகாயம் அடைந்த மகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2023-09-07 21:22 GMT

தஞ்சையில், ஸ்கூட்டர் மீது லாரி மோதியதில் தாய்-மகன் பரிதாபமாக பலியானார்கள். படுகாயம் அடைந்த மகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பள்ளிக்கு அழைத்து சென்றார்

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள சுந்தரம் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் அப்துல்காதர். இவருடைய மனைவி ஜெரீனா பேகம்(வயது 36). இவர்களுடைய மகள் ஷபீகா(14), மகன் முகமது சைப் (4). தஞ்சை ஈஸ்வரி நகரில் ரெட்டிப்பாளையம் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஷபீகா 7-ம் வகுப்பும், முகமதுசைப் எல்.கே.ஜி.யும் படித்து வந்தனர்.

இவர்களை தினமும் ஜெரீனாபேகம் ஸ்கூட்டரில் பள்ளிக்கு அழைத்துச்செல்வார். அதேபோன்று பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு அழைத்து வருவார். அதன்படி நேற்று காலை குழந்தைகளை பள்ளியில் விடுவதற்காக ஸ்கூட்டரில் ஜெரீனாபேகம் அழைத்து சென்றார். பள்ளி அருகே சென்றபோது பிரிவு சாலையில் இருந்து ரெட்டிப்பாளையம் சாலையில் திரும்பினார்.

லாரி மோதி தந்தை-மகன் பலி

அப்போது அந்த வழியாக வந்த லாரி, ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் லாரி நிற்காமல் 20 அடி தூரம் வரை அவர்களை இழுத்துச்சென்றது. இதில் ஜெரீனாபேகம் சம்பவ இடத்திலேயே பலியானார். ஷபீகா, முகமது சைப் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்த இருவரையும் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுவன் முகமதுசைப் பரிதாபமாக இறந்தான். ஷபீகாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் மற்றும் தஞ்சை நகர போக்குவரத்து குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் பலியான ஜெரீனாபேகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து தஞ்சை நகர போக்குவரத்து குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பொதுமக்கள் சாலை மறியல்

இதற்கிடையே வேகத்தடை இல்லாததால் தான் இந்த விபத்து நடந்துள்ளது. எனவே வேகத்தடை அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது வேகத்தடை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்