உடுமலை நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு தரப்பட்ட சேவைகள் நாள் தோறும் செய்யப்பட்டு வருகிறது. அலுவலக வேலைகளுக்கு அடுத்த படியாக சுகாதாரம், தூய்மை உள்ளிட்ட பொதுபணிகள் மேற்கொள்ள வாகனங்களும் வாங்கப்பட்டு உள்ளது. அதில் சாலைகளில் தேங்கி உள்ள குப்பை மற்றும் மண்ணை அள்ளும் வாகனமும் அடங்கும். இந்த வாகனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பல ஆயிரங்கள் செலவில் வாங்கப்பட்டது. சிறிது நாட்கள் பயன்பாட்டில் இருந்து வந்த அந்த வாகனம் பின்பு உபயோகம் இல்லாமல் காட்சி பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் பிரதான சாலைகளில் அதிகளவில் மண்தேங்கி வருகிறது. காற்று வேகமாக வீசும் போது சாலையில் தேங்கி உள்ள மண் பொதுமக்களையும் இருசக்கர வாகன ஓட்டிகளையும் பதம் பார்த்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி வருவதுடன் பொதுமக்களும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். பொதுமக்கள் நகராட்சிக்கு வரியாக செலுத்துகின்ற பணத்தை வைத்து வாகனங்கள் வாங்குவது உபயோகமான ஒன்றாகும். ஆனால் அவற்றின் பயன்பாட்டை நாள்தோறும் மேற்கொள்வதும் அவசியமாகும். பயன்பாடு இல்லாமல் நிறுத்தி வைப்பதற்கு பல ஆயிரம் செய்து வாகனங்கள் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.இதனால் மக்கள் வரிப்பணமும் வாகனம் வாங்கப்பட்டதற்கான நோக்கமும் வீணாகி உள்ளது. மேலும் பயன்பாடு இல்லாமல் வாகனத்தை நிறுத்தி வைத்து உள்ளதால் சேதம் அடையும் நிலையும் ஏற்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வாங்கப்பட்ட சாலையை தூய்மைப்படுத்தும் வாகனத்தை முறையாக இயக்கி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.