மக்களவை தேர்தல்: உதயசூரியன் சின்னத்தில் போட்டியில்லை; ம.தி.மு.க. திட்டவட்டம்

தேர்தலில் இந்த முறை போட்டியிட, ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதிகளை ஒதுக்கும்படி அக்கட்சி கேட்டுள்ளது.

Update: 2024-02-29 06:42 GMT

சென்னை,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடுக்கான ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுவதற்கான தொகுதி உடன்பாடு பற்றிய பேச்சுவார்த்தையில் தி.மு.க. கூட்டணி ஈடுபட்டு வருகிறது. இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க. இதற்காக 2 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த 4-ந்தேதியும், 2-வது கட்ட பேச்சுவார்த்தை கடந்த 24-ந்தேதியும் நடந்து முடிந்தது. இதில், தொகுதி பங்கீட்டில் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. இதனை தொடர்ந்து, தொகுதிகளை ஒதுக்குவது பற்றி மீண்டும் இன்று 3-வது கட்ட பேச்சுவார்த்தை நடத்த முடிவாகி உள்ளது.

இதன்படி, தி.மு.க.வின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு ம.தி.மு.க. குழுவானது வருகை தந்துள்ளது. இதனை தொடர்ந்து, தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவுடன் ஆலோசனை மேற்கொள்கிறது.

இந்த தேர்தலில், காஞ்சீபுரம், கடலூர், ஈரோடு, விருதுநகர், திருச்சி, மயிலாடுதுறை ஆகிய 6 இடங்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதற்கான பட்டியலை ம.தி.மு.க. கொடுத்துள்ளது. தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தையில் இன்று மதியத்திற்குள் முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என அக்கட்சியினர் தெரிவித்தனர்.

கடந்த முறை, 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு, அக்கட்சி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, பேசியபடி ஒரு மாநிலங்களவை இடமும் வழங்கப்பட்டது. இந்த முறையும், 1 மக்களவை மற்றும் 1 மாநிலங்களவை தொகுதி வழங்க வேண்டும் என கேட்க கூடும் என தெரிகிறது.

இதுபற்றி ம.தி.மு.க. அவை தலைவர் அர்ஜுன் ராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்த முறை தேர்தலில் போட்டியிட, ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதிகளை ஒதுக்கும்படி கேட்டுள்ளோம் என கூறியுள்ளார்.

எந்த சின்னத்தில் கட்சி போட்டியிடும் என்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த தேர்தலில், உதயசூரியன் சின்னத்தில் நாங்கள் போட்டியிடமாட்டோம். எங்களுடைய சின்னத்திலேயே நாங்கள் போட்டியிடுவோம். அதனை பேச்சுவார்த்தையின்போது உறுதியாகவும், இறுதியாகவும் தெரிவித்து இருக்கிறோம். இறுதி முடிவை கட்சி தலைமையே எடுக்கும். பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும் என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்