வாகனத்துக்கு பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய வட்டார போக்குவரத்து அலுவலர் கைது
வாகனத்துக்கு பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய வட்டார போக்குவரத்து அலுவலர் கைது செய்யப்பட்டார். மேலும் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.2½ லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.;
கடலூர்,
கடலூர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் வாகனத்தை சென்னையை சேர்ந்த ஒருவரிடம் இருந்து வாங்கினார்.
பின்னர் அந்த வாகனத்தின் பதிவை தனது பெயருக்கு மாற்றம் செய்யவும், தகுதி சான்று பெறுவதற்காகவும் விண்ணப்பித்திருந்தார். இதுதொடர்பாக கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகரை அவர் சந்தித்தார். அப்போது, அவர் தகுதி சான்று வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள 5 ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.
லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்
லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வராஜ், இதுபற்றி தனது நண்பரான பத்திரக்கோட்டையை சேர்ந்த வெங்கடாஜலபதியிடம் தெரிவித்தார். இதை தொடர்ந்து, வெங்கடாஜலபதி நேற்று கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரைப்படி ரசாயன பொடி தடவிய 5,500 ரூபாயை வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகரிடம் வெங்கடாஜலபதி கொடுக்க சென்றார். ஆனால் அவர் வாங்க மறுத்ததுடன், தனது தனிப்பட்ட உதவியாளரான சிவா என்பவரிடம் கொடுக்கும்படி தெரிவித்துள்ளார்.
உதவியாளருடன் கைது
இதையடுத்து, அலுவலகத்தில் இருந்த சிவாவிடம் 5,500 பணத்தை வெங்கடாஜலபதி கொடுத்துள்ளார். அதை சிவா வாங்கி கொண்டு வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகரிடம் கொடுத்தார்.
அதை சுதாகர் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுதாகரை கையும், களவுமாக பிடித்தனர்.
இதனை அடுத்து சுதாகர் மற்றும் லஞ்சம் பெற உதவிய சிவா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அலுவலகத்தில் இருந்த கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.