திண்டுக்கல்லில் கூட்டுறவு வாரவிழாவில் 5 ஆயிரத்து 360 பேருக்கு ரூ.33¼ கோடி கடன்கள்
திண்டுக்கல்லில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் 5 ஆயிரத்து 360 பேருக்கு ரூ.33¼ கோடி கடன்களை அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் வழங்கினர்.;
திண்டுக்கல்லில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் 5 ஆயிரத்து 360 பேருக்கு ரூ.33¼ கோடி கடன்களை அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் வழங்கினர்.
கூட்டுறவு வாரவிழா
திண்டுக்கல்லில், 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா இன்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கி பேசினார். மண்டல இணை பதிவாளர் காந்திநாதன் வரவேற்றார். இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., காந்திராஜன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் கலந்துகொண்டு மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம், கடனுதவிகளை வழங்கினர்.
ரூ.33¼ கோடி கடன்
இந்த விழாவில் 1,162 பேருக்கு ரூ.17.45 கோடி பயிர்க்கடன், 330 பேருக்கு ரூ.1.19 கோடி கால்நடை பராமரிப்பு கடன், 287 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.9.68 கோடி கடன், 31 குழுக்களுக்கு ரூ.68.70 லட்சம் கூட்டு பொறுப்புக்குழு கடன், 40 பேருக்கு ரூ.52.30 லட்சம் மத்திய கால விவசாய கடன், 54 பேருக்கு ரூ.21.20 லட்சம் மாற்றுத்திறனாளிகள் கடன், 31 பேருக்கு ரூ.6.70 லட்சம் விதவைகள் மறுவாழ்வு கடன், 37 பேருக்கு ரூ.36.20 லட்சம் மகளிர் தொழில் முனைவோர் கடன் என்பன உள்பட மொத்தம் 5 ஆயிரத்து 360 பேருக்கு ரூ.33 கோடியே 25 லட்சம் மதிப்பில் கடன்கள் வழங்கப்பட்டன. மேலும் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழு கடனுக்கான தள்ளுபடி சான்று வழங்கப்பட்டது.
மாணவர்களுக்கு பரிசு
இதுதவிர மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு கூட்டுறவு ஆராய்ச்சி வளர்ச்சி மற்றும் கல்வி நிதியாக ரூ.17 லட்சத்தை அமைச்சர் இ.பெரியசாமி, கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநரிடம் வழங்கினார். பின்னர் பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூட்டுறவு பணியாளர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
இந்த விழாவில் திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ராமகிருஷ்ணன், மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் இளங்கோவன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் செல்வக்குமார், திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி பொதுமேலாளர் விநாயகமூர்த்தி, கூட்டுறவு துணை பதிவாளர் மதி, மாவட்ட கூட்டுறவு அச்சக மேலாண்மை இயக்குனர் அன்பரசு மற்றும் கூட்டுறவு துணை பதிவாளர்கள், ஒன்றியக்குழு தலைவர்கள் கலந்துகொண்டனர்.