லிவிங் டுகெதர்...! கணவன் வீட்டு முன்பு மனைவி தர்ணா: போலீஸ் நிலையத்தில் கணவன் தர்ணா!

ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேசிய நிலையில் விக்னேஷ் தீபிகாவை திருமணம் செய்து கொண்டார் .

Update: 2023-06-22 05:54 GMT

ஆத்தூர்

சேலம் மாவட்ட, ஆத்தூர் அருகே உள்ள விநாயகபுரம் முத்துமாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 60) ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவரது மனைவி ஜூலி (55) , இவர்களது மகன் விக்னேஷ் 23 .

இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு கோவையில் தங்கி எம்பிஏ படித்து வந்தார் .சென்னை தரமணியை சேர்ந்த சுப்ரமணியம் என்பவர் மகள் தீபிகா 23 .சென்னையில் பிகாம் படித்து வந்தார் .

இவருக்கும் விக்னேஷுக்கும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. இதன் தொடர்ச்சியாக இருவரும் மேற்படிப்புக்காக திருச்சியில் ஒரே வீட்டில் தங்கி இருந்து படித்து வந்தனர் .

இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் விக்னேஷ் திருச்சிக்கு செல்லவில்லை. மேலும் மாணவி தீபிகாவை தொடர்பு கொள்வதுமில்லை.

இதனால் காதலரை தேடி தீபிகா சேலத்துக்கு கடந்த மாதம் வந்தார் . அப்போது தீபிகா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து மனு ஒன்று அளித்தார். மனுவில் விக்னேஷ் என்பவரை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தேன் .எங்களுக்கு திருமணம் வையுங்கள் என புகார் மனு கொடுத்தார்.

இது குறித்து ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார் அதன் பெயரில் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேசிய நிலையில் விக்னேஷ் தீபிகாவை திருமணம் செய்து கொண்டார் .

அதன் பிறகு ஒரு மாத காலம் விக்னேஷ் சென்னை தரமணியில் மாமனார் வீட்டில் தங்கி இருந்தார். பின்னர் ஆத்தூர் சென்று வருவதாக கூறியவர் மீண்டும் மனைவியை பார்க்க செல்லவில்லை .இதனால் ஏமாற்றம் அடைந்த தீபிகா தனது உறவினுடன் ஆத்தூர் சக்தி நகரில் உள்ள தனது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என கூறி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தி வருகிறார்.

ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தனது மனைவி ஜூலி மகன் விக்னேஷ் ஆகியோருடன் நேற்று வீட்டை பூட்டி விட்டு சென்றார்.

பின்னர் ரவி தனது குடும்பத்தினருடன் நேற்று ஆத்தூர் மகளிர் போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் . ஆத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை நடத்தினார் .அப்போது விக்னேஷ் கூறுகையில், நாங்கள் கல்லூரி படிக்கும்போது இன்ஸ்டாகிராம் மூலம் சென்னை சேர்ந்த தீபிகா 23 என்பவருடன்

பழக்கம் ஏற்பட்டு காதலித்தோம்.கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டேன் .ஆத்தூர் மகளிர் போலீசில் தீபிகா என் மீது புகார் அளித்த போது கடந்த ஏப்ரல் 20-ம் தேதி இன்ஸ்பெக்டர் தமிழரசி என்னை கட்டாயப்படுத்தியதால் தீபிகாவின் கழுத்தில் தாலி கட்டினேன்.

இரு தினங்களுக்கு முன்பு எனது வீட்டிற்கு வந்த தீபிகா மற்றும் அவரது உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே வந்து எனது சகோதரி சங்கீதாவை தாக்கினர். தீபிகாவுடன் வாழ்வதற்கு விருப்பம் இல்லாததால் அவரது வீட்டிற்கு செல்லும்படி கூறியும் என்னை டார்ச்சர் செய்து மிரட்டல் விடுத்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார். ரெண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு ரவி மீண்டும் வீட்டிற்கு திரும்பினார்.

இந்த நிலையில் நாலாவது நாளாக தீபிகா இன்றும் கணவர் வீட்டு முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தீபிகா கூறுகையில் ,ஆத்தூர் புதுப்பேட்டையை சேர்ந்த நான் சில ஆண்டுகளாக பெற்றோருடன் சென்னையில் குடியிருந்து வருகிறேன் .

2020 முதல் விக்னேசை காதலித்தேன் .இருவரும் சென்னை திருச்சியில் படித்துக் கொண்டிருந்தபோது லிவிங் டுகெதர் முறையில் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தோம். அதன்பின் சென்னை ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த போது தன் வீட்டில் நெருக்கமாக வாழ்ந்து வந்தோம் .2022ல் என்னை விட்டு சென்றதால் சென்னை தரமணி ஸ்டேஷனில் புகார் அளித்தேன்.

கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி ஆத்தூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் வைத்து விக்னேஷ் எனக்கு தாலி கட்டினார்.மீண்டும் அவர் பிரிந்து சென்றதால் ஆத்தூரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தேன். அவரது பெற்றோர் வீட்டிற்குள் அனுமதிக்காதால் இருதினங்களாக வீட்டின் வெளியே இருந்தேன்.

நேற்று வீட்டை பூட்டிவிட்டு சென்றதால் கதவை உடைத்து உள்ளே சென்றேன். என் மீது விக்னேஷ் பொய்யான புகார் கூறுகிறார். அவரது பெற்றோர் கணவருடன் சேர்ந்து வாழ விடாமல் வரதட்சணை கேட்டு மிரட்டி வருகின்றனர். நான் விக்னேஷ் உடன் சேர்ந்து வாழ்வேன் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதற்காக எத்தனை நாள் வேண்டுமானாலும் போராட்டத்தில் ஈடுபடுவேன் .இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து போலீசார் இன்று தீபிகாவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர். அதனால் சேலத்திற்கு வருவதாக தீபிகா கூறினார். ஆனாலும் இன்று காலையில் தீபிகா கணவர் வீட்டு முன்பு அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். கணவருடன் சேர்த்து வைக்கும் வரை போராட்டத்தை தொடர்வேன் என்றும் கூறியதால் தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்