விளையாட்டு வீரர்களை போல 'இந்தியா' அணியின் வெற்றிக்காக நாங்களும் பாடுபடுகிறோம் முதல்-அமைச்சர் பேச்சு

விளையாட்டு வீரர்களை போல் நாங்களும் ‘இந்தியா’ அணியின் வெற்றிக்காக பாடுபடுகிறோம் என்று சென்னையில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2023-07-25 20:44 GMT

சென்னை,

முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டி நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பதக்கப்பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்த சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்ட அணிகளுக்கு பரிசுக்கோப்பைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

விளையாட்டுப் பிள்ளையாக இருக்கிறாரே என்று வளர்ந்த பிள்ளையைப் பார்த்து சில பெற்றோர் நினைப்பதுண்டு. விளையாட்டுத் துறைக்கு அமைச்சராக நம் பிள்ளை சிறப்பாக செயல்படுகிறார் என்று பெற்றவனை மகிழ வைக்கக்கூடியவராக உதயநிதி இருக்கிறார். விளையாட்டைப் பார்ப்பவர்களுக்குக் களிப்பாக இருக்கும். விளையாட்டுப் போட்டிகளை நடத்துபவர்களும், அந்தப் போட்டிகளில் விளையாடுபவர்களும் பொறுப்பாக இருக்க வேண்டும்.

உதயநிதி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையே புத்துணர்வு பெற்றுள்ளது. நாள்தோறும் ஏராளமான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. எப்போது பார்த்தாலும் விளையாட்டு வீரர்களுடன் அமைச்சர் உதயநிதி இருக்கிறார். விளையாட்டுத் துறையால் அமைச்சர் பெருமை அடைவதும் -அமைச்சர் உதயநிதியால் விளையாட்டுத் துறை சிறப்பு அடைவதுமான காட்சிகளை நான் காண்கிறேன். இவை எல்லாம் விளம்பரத்துக்காகச் செய்யப்படுபவை அல்ல. விளையாட்டுத் துறையின் செயல்கள் மூலமாக இத்தகைய பாராட்டுகள் கிடைக்கிறது.

வீரர்களுக்கு 2 ஆயிரம் அறைகள் ஒதுக்கீடு

முதல்-அமைச்சர் கோப்பை போட்டிகளை நடத்துவதற்கு ரூ.50 கோடியே 86 லட்சம் நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்தது. இதில் பரிசுத் தொகையாக மட்டும் 28 கோடியே 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகள் மிகச் சீராக நடைபெற்றதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில், 3 லட்சத்து 70 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அதன்பிறகு மண்டல அளவிலான போட்டிகளில் 27 ஆயிரத்து 54 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் மட்டும் 17 இடங்களில் நடத்தப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகள் மட்டும் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

போட்டிகளில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது ஒருபக்கம் என்றால் - இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்ததன் மூலமாக இந்த விளையாட்டுத் துறையும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது என்பதை நான் பெருமையோடு இங்கே பதிவு செய்கிறேன்.

மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளைப் பற்றி நீங்கள் அனைவரும் அறிவீர்கள். ஒற்றையர் பிரிவு போட்டியாக இருந்தால் அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாயும், குழு போட்டியாக இருந்தால் அதிகபட்சம் 9 லட்சம் ரூபாயும் பரிசுத் தொகை பெறும் மாபெரும் போட்டியாக இது அமைந்துள்ளது.

மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 27 ஆயிரம் பேரையும் சென்னைக்கு அழைத்து வர சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சென்னையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளிர்சாதன வசதி கொண்ட அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. வீரர், வீராங்கனைகள் போட்டி நடைபெறும் இடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுக்குச் சென்று வர 72-க்கும் மேற்பட்ட பேருந்து வசதிகளும், மருத்துவ வசதிகளும் செய்யபட்டது.

'டீம் ஸ்பிரிட்' என்று விளையாட்டுக் களத்தில் சொல்வார்கள். விளையாட்டுப் போட்டிகளை நடத்தும்போதும் பல்வேறு துறையினருடன் இணைந்து செயல்படக்கூடிய இத்தகைய 'டீம் ஸ்பிரிட்' தேவை. அந்த வகையில், போட்டிகளை நடத்துவதற்கான சிறப்பான சூழலை உருவாக்குவதில் நமது அரசு நற்பெயரை பெற்றிருக்கிறது.

நான் மட்டுமல்ல, தலைவர் கலைஞர் கருணாநிதியும் மிகப்பெரிய விளையாட்டு ரசிகர். அதனால்தான் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தினார். அவரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன. வெற்றியையும் தோல்வியையும் இயல்பாக எடுத்துக் கொண்டு சளைக்காமல் போராடியவர் அவர். இதைத்தான் விளையாட்டுக் களத்தில் 'ஸ்போர்ட்ஸ்மேன் ஷிப்' என்கிறார்கள். அரசியலில் அவர் 'ஸ்டேட்ஸ்மேனாக' இருந்தார். அரசியலை அணுகுவதில் அவரிடம் 'ஸ்போர்ட்ஸ்மேன் ஷிப்' இருந்தது.

'இந்தியா' அணி

விளையாட்டில் நீங்கள் அனைவரும் அறத்தைப் பேண வேண்டும் என்று சொல்லி, மாநில போட்டிகளில் பங்கெடுத்து பதக்கங்கள் பெற்ற அனைவரையும் பாராட்டுகிறேன். மாநில அளவில் பல போட்டிகளில் பங்கேற்றுள்ள நீங்கள் இனி வருங்காலத்தில் இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வேண்டும். விளையாட்டு வீரர்களான நீங்கள் மட்டுமல்ல, இந்தியாவுக்காகத்தான் நாங்களும் பாடுபடுகிறோம்.

எங்கள் அணியும் 'இந்தியா' அணிதான். (தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்திய தேசிய வளர்ச்சி கூட்டணி) அதன் வெற்றிக்காகத்தான் நாங்களும் ஒருங்கிணைந்து, 'டீம் ஸ்பிரிட்டுடன்' பாடுபடுகிறோம்.

விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிப்பதைப் போலவே, விளையாட்டு மீதான ஆர்வத்தை அனைத்து மாணவ, மாணவியருக்கும் ஏற்படுத்த வேண்டும், வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதியையும், விளையாட்டுத் துறை அதிகாரிகளையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். அப்படிச் செய்தால் தமிழ்நாட்டின் இளைய சக்தியானது ஈடு இணையற்ற சக்தியாக வளரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மணிப்பூர் வீரர்கள் வருகை

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், 'எல்லா தரப்பினரையும் உள்ளடக்கி நேர்மையாக இந்த போட்டியை நடத்தி முடித்திருக்கிறோம். அதனால் தான் இந்த போட்டி இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகராக உருவாக்க வேண்டும் என்பதே முதல்-அமைச்சரின் கனவு. மணிப்பூரில் சாதகமற்ற சூழ்நிலை நிலவுவதால் அங்குள்ள விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து பயிற்சி பெறலாம் என்று முதல்-அமைச்சர் அழைப்பு விடுத்து இருந்தார். அதை ஏற்று மணிப்பூர் வாள்வீச்சு வீரர்கள் விரைவில் இங்கு வந்து பயிற்சி பெற உள்ளனர். அவர்களுக்கு தேவையான எல்லாம் வசதிகளும் செய்து கொடுக்கப்படும்' என்றார்.

விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, எஸ்.டி.ஏ.டி. உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்