தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
விவசாயியை உலக்கையால் தாக்கி கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.;
நாகர்கோவில்:
விவசாயியை உலக்கையால் தாக்கி கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
விவசாயி கொலை
நாகர்கோவில் கோட்டார் வாகையடி தெருவை சேர்ந்தவர் சுயம்பு (வயது 70), விவசாயி. அதே பகுதியைச் சேர்ந்தவர் புவனேஷ் என்ற புவனேஷ்வரன் (35), தொழிலாளி. இவர் சுயம்பு வீட்டுக்குள் நுழைந்து இரும்பு தகரம் ஒன்றை எடுத்துச் சென்றுள்ளார். இதனை சுயம்பு தட்டிக்கேட்டதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உருவானது.
இந்தநிலையில் கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுயம்பு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது புவனேஷ் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த சுயம்புவை உலக்கையால் திடீரென சரமாரியாக தாக்கி கொலை செய்தார்.
பின்னர் புவனேஷ் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து கோட்டார் போலீசில் சுயம்புவின் மகள் சுகந்தி புகார் செய்தார்.
அந்த புகாரின் பேரில் புவனேஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து புவனேஷ் ஜாமீனில் வெளியே வந்தார்.
ஆயுள் தண்டனை
இதுதொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணையின் இறுதியாக நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதையடுத்து புவனேஷ் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்து நீதிபதி ஜோசப் ஜாய் அளித்த தீர்ப்பில், புவனேஷை குற்றவாளி என அறிவித்து அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததற்கு ஓராண்டு ஜெயில் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் அறிவித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மதியழகன் ஆஜரானார்.