அக்கா-தம்பி உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை
பேராவூரணி அருகே மணல் திருட்டை தடுத்த கிராம நிர்வாக உதவியாளரை அடித்துக்கொன்ற வழக்கில் அக்கா-தம்பி உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.;
பேராவூரணி அருகே மணல் திருட்டை தடுத்த கிராம நிர்வாக உதவியாளரை அடித்துக்கொன்ற வழக்கில் அக்கா-தம்பி உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
கிராம நிர்வாக உதவியாளர்
தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்த விளாங்குளம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் சின்னையா. இவருடைய மகன் பூமிநாதன்(வயது 29). இவர், விளாங்குளம் கிராம உதவியாளராக பணியாற்றி வந்தார்.அப்போது அந்த பகுதியில் உள்ள காட்டாற்றில் அனுமதியின்றி மாட்டு வண்டி மற்றும் டிராக்டரில் சிலர் திருட்டுத்தனமாக மணல் எடுத்து வந்துள்ளனர். இது குறித்து பூமிநாதன் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுத்து வந்துள்ளார். இதனால் அவருக்கும், பட்டங்காட்டை சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
அடித்துக்கொலை
இந்த நிலையில் கடந்த 9-9-2017-ந் தேதி இரவு பட்டங்காடு கிராமத்தில் ஒரு முட்புதரில் பூமிநாதன் படுகாயங்களுடன் கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் சின்னையா அங்கு சென்று மகனை மீட்டு மன்னார்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த பூமிநாதன் மறுநாள் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
அக்கா-தம்பி உள்பட 5 பேர் கைது
இது குறித்து சின்னையா கொடுத்த புகாரின் பேரில் பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பட்டங்காடு கிராமத்தை சேர்ந்த சீனிவாசன்(35), அவருடைய அக்கா அல்லிராணி(42), பாரதிதாசன் தெருவை சேர்ந்த பன்னீர் மகன் அண்ணாமலை(30), அதே பகுதியை சேர்ந்த பஞ்சாட்சரம் மகன் சந்திரபோஸ்(32), காத்தையன் மகன் அய்யப்பன்(30) ஆகியோர் சேர்ந்து மணல் திருட்டு தொடர்பான முன்விரோதத்தில் பூமிநாதனை கட்டை மற்றும் கம்பியால் அடித்துக்கொன்றது தெரிய வந்தது.இதையடுத்து இந்த கொலை வழக்கு தொடர்பாக 5 பேரையும் பேராவூரணி போலீசார் கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கு தஞ்சை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி ரவி விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட சீனிவாசன், அண்ணாமலை, அல்லிராணி, சந்திரபோஸ், அய்யப்பன் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.75 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக 15 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அரசு தரப்பில் வக்கீல் இளஞ்செழியன் ஆஜராகி வாதாடினார்.