நெடுஞ்சாலைத்துறை ஊழியருக்கு ஆயுள் தண்டனை
திருப்பூர் அருகே மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்த நெடுஞ்சாலைத்துறை ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.;
திருப்பூர்,
திருப்பூர் அருகே மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்த நெடுஞ்சாலைத்துறை ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
மனைவி கொலை
திருப்பூரை அடுத்த அவினாசிபாளையம் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 50). நெடுஞ்சாலைத்துறை ஊழியர். இவருடைய மனைவி சாந்தி (40). முருகனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 15-6-2016 அன்று வீட்டில் இருந்தபோது கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த முருகன், கல்லால் தாக்கி சாந்தியை கொலை செய்தார். இதுதொடர்பாக அவினாசிபாளையம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆயுள் தண்டனை
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்த குற்றத்துக்கு முருகனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.