நீர்நிலைகளில் கழிவுநீரை கலக்கும் லாரிகளின் உரிமம் ரத்து - அமைச்சர் மெய்யநாதன்
நீர்நிலைகளில் கழிவுநீரை கலக்கும் லாரிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் மெய்யநாதன் எச்சரிக்கை விடுத்தார்.;
ஆலோசனை கூட்டம்
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் மண்டல அலுவலகத்தில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் திட மற்றும் திரவ கழிவுகள் மேலாண்மை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். அமைச்சர் மெய்யநாதன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர்கள் ராகுல்நாத்(செங்கல்பட்டு), ஆர்த்தி(காஞ்சீபுரம்), செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், எம்.எல்.ஏ.க்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, எழிலரசன், பாலாஜி, செல்வப்பெருந்தகை, மேயர்கள் வசந்தகுமாரி(தாம்பரம்), மகாலட்சுமி(காஞ்சீபுரம்), துணை மேயர் காமராஜ், மண்டல தலைவர்கள் ஜோசப் அண்ணாதுரை, டி.காமராஜ், எஸ்.இந்திரன், வே.கருணாநிதி, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் செயற்பொறியாளர் முருகேசன், பொதுபணித்துறை செயற்பொறியாளர் செல்வக்குமார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது:-
கழிவுநீர் லாரிகள் உரிமம் ரத்து
கண்ட இடங்களில் கழிவுநீர் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் நீர் நிலைகள் பாதிக்கப்படுகிறது. எனவே செங்கல்பட்டு மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள கழிவுநீர் லாரிகள் அனைத்தையும் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட கழிவுநீர் லாரிகள் குறித்த விவரங்கள் முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சம்பந்தப்பட்ட லாரிகளில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டு கழிவுநீரை கொண்டு செல்லும் லாரிகள் எந்த இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டுமோ அங்கு செல்கின்றதா? என கண்காணிக்கப்படும். அதை மீறி. நீர்நிலைகளில் கழிவுநீரை கலக்கும் லாரிகளின் உரிமம் ரத்து செய்யப்படும்.
பறக்கும் படை
அதேபோல அடுக்குமாடி குடியிருப்புகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு தேவையான அளவு இருக்கின்றதா?, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் முறையாக செயல்படுகிறதா? என்பதை கண்காணிப்பதற்கு 2 குழுக்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக ஒரு பறக்கும் படை அமைத்து இந்த பணிகள் அனைத்தையும் முறையாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் ஆகிய 2 மாவட்டங்களிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை பிளாஸ்டிக் பைகளை சேகரித்து, சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்ப வேண்டும். செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவு நீரை கலக்கும் தொழிற்சாலைகளின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.