எல்.ஐ.சி. வீட்டுக்கடன் நிறுவனத்திற்கு ரூ.2 லட்சம் அபராதம்
திருச்சி எல்.ஐ.சி. வீட்டுக்கடன் நிறுவனத்திற்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து அரியலூர் மாவட்ட நுகர்வோர் ஆணையம் தீர்ப்பு அளித்தது.;
எல்.ஐ.சி. வீட்டுக்கடன் நிறுவனம்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா அணிக்குறிச்சான் தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி ராசாத்தி (வயது 33). இவர் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருச்சியில் உள்ள எல்.ஐ.சி. வீட்டுக்கடன் நிறுவனத்தில் ரூ.8 லட்சம் வீட்டுக்கடன் பெற வேண்டி விண்ணப்பித்தார். இதையடுத்து, எல்.ஐ.சி. வீட்டுக்கடன் நிறுவனம் ராசாத்தியிடம் ரூ.63 ஆயிரத்து 911-ஐ பெற்றுக்கொண்டு எல்.ஐ.சி. ஆயுள் காப்பீடு பாலிசியை வழங்கியது.
அதன்பிறகு ராசாத்தி பெயரில் உள்ள வீட்டு பத்திரத்தை எல்.ஐ.சி. வீட்டுக்கடன் நிறுவனம் ராசாத்திக்கு ரூ.8 லட்சம் கடன் கொடுத்தது போல் அடமானம் பதிவு செய்து கொண்டனர். ஆனால் ஒப்பந்தப்படி கடன் தொகை வழங்க வில்லை.
ரூ.2 லட்சம் அபராதம்
இதனைதொடர்ந்து ராசாத்தி எல்.ஐ.சி. வீட்டுக்கடன் நிறுவனத்தில் சென்று கேட்டபோதும் கடன் தொகை வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ராசாத்தி கடந்த மே மாதம் அரியலூர் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கு விசாரணையின் போது திருச்சி எல்.ஐ.சி. வீட்டுக்கடன் நிறுவனம் ராசாத்தியை தங்களுக்கு தெரியவே தெரியாது என்றும், ராசாத்தி தங்களுடைய இணை நிறுவனமான எல்.ஐ.சி. வீட்டுக்கடன் நிறுவனத்தின் இதர நிதிச்சேவைகள் வழங்கும் நிறுவனத்தில் ஏதேனும் பரிவர்த்தனை செய்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர். இந்த புகாரை விசாரித்த நுகர்வோர் ஆணைய தலைவர் தமிழ் செல்வி மற்றும் உறுப்பினர்கள் பாலு, லாவண்யா ஆகியோர் தலைமையிலான அமர்வு பொய்யான தகவல்களை கூறி ஏமாற்ற நினைத்த திருச்சி எல்.ஐ.சி. வீட்டுக்கடன் நிறுவனத்திற்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்தனர். இந்த தொகையை ராசாத்திக்கு வழங்க வேண்டும் என்றும், பதிவு செய்த அடமானத்தை நிறுவனத்தின் செலவிலேயே ரத்து செய்து அசல் பத்திரத்தை திருப்பித்தர வேண்டும். பத்திரப்பதிவு கட்டணம் ரூ.10 ஆயிரத்து 210 மற்றும் காப்பீட்டுத்தொகை ரூ.63 ஆயிரத்து 911-ஐ வட்டியுடன் ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும். மேலும், வழக்கு செலவுக்காக ரூ.10 ஆயிரத்தை வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது.