ஞானத்தின் திறவுகோலான நூலகங்கள் மேம்படுத்தப்படுமா?

Update: 2022-10-26 16:11 GMT


ஒரு நூலகம் திறக்கப்படும் போது, ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என்பார்கள். ஒரு இனத்தை அடிமையாக்க நினைப்பவர்கள், முதலில் அவர்களின் கைகளில் இருக்கும் புத்தகங்களை பறித்து எறிந்துவிடுவார்கள். இதைத்தான் ஆரம்ப காலத்தில் இருந்து ஆதிக்க சக்திகள் செய்து வந்தன.

கிராமங்கள் தோறும் பள்ளிக்கூடங்களைத் திறந்து கடைக்கோடியின் கைகளிலும் புத்தகங்களைக் கொடுத்து அந்த சதியினை முறியடித்தவர் பெருந்தலைவர் காமராஜர். அதன்பிறகே கல்வியிலும், வாழ்விலும் நாம் எழுச்சியைச் சந்தித்துக்கொண்டு வருகிறோம். புத்தகங்களின் அருமையையும், அதை அடைகாத்துவரும் நூலகங்களின் பெருமையையும் இதன் மூலம் உணர முடியும்.

மனித வாழ்வின் மான்பு என்பது நல்லவற்றை கற்று, அதன்படி நிற்பதே ஆகும். நல்ல பயனுள்ள புத்தகங்களை கற்பதால் மனிதர்கள் தவறு செய்யாமல் அவர்கள் வாழ்வு மேம்படும். புத்தகங்கள் இல்லாத வீடு சாளரங்கள் இல்லாத சத்திரம் போன்றது என குறிப்பிடுவார்கள். ஒரு சமூகம் சிறந்து விளங்க வேண்டும் என்றால் கல்வியிலும், அறிவிலும் மேன்மை பெற்றவர்கள் அங்கு வாழ்வதால் சாத்தியமாகும். மக்களை மேன்மக்களாக மாற்றுவதில் நூலகத்தின் பங்கு முக்கியம்.

கல்வி என்ற பெரும் கடலை தனக்குள் தேக்கி வைத்துள்ள நூலகங்கள் தன்னை தேடி வரும் வாசகர்களின் அறிவு பசியை போக்கி அவர்களை பூரணமான மனிதர்களாக சமூகத்துக்கு கொடுக்கிறது. மனிதனுக்கு அழகான குணமான அமைதியை இந்த நூலகங்கள் கொடுக்கும். பொறுமை, தேடல், ஆழமான வாசிப்பு, விவேகம், எழுத்தாற்றல், கேள்வி, ஞானம், படைப்பாற்றல் போன்ற உயர்ந்த திறன்களை இந்த நூலகங்கள் வழங்கும் பெருமையுடையது. பல நூறு நண்பர்களை விட ஒரு நல்ல புத்தகம் மிகச்சிறந்த நண்பன் என்றால் பல லட்சம் புத்தகங்களை கொண்ட நூலகம் மிகச்சிறந்தது.

29 லட்சம் புத்தகங்கள்

திருப்பூர் மாவட்டத்தில் 137 நூலகங்கள் உள்ளன. இந்த நூலகங்களில் மொத்தம் 29 லட்சம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. மாவட்டத்தின் தலைமை நூலகம் திருப்பூர் பார்க் ரோட்டில் மாவட்ட மைய நூலகமாக அமைந்துள்ளது. இங்கு 1 லட்சத்து 47 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. இந்த நூலகத்தில் 23 ஆயிரத்து 700 உறுப்பினர்கள் உள்ளனர். புரவலர்கள் மட்டும் 246 பேர் இருக்கிறார்கள்.

தற்போதைய காலத்தில் செல்போன், டி.வி., கணினி என நவீன தொழில்நுட்பம் வந்தாலும், நூலகத்தை தேடி வரும் வாசகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தினமும் 200 பேர் இங்கு வந்து புத்தகங்கள், நாளிதழ்களை வாசித்து செல்கிறார்கள். இதுதவிர டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வுக்கு தயாராகும் கல்லூரி மாணவர்கள் நூலகத்துக்கு வந்து புத்தகங்களை தேர்வு செய்து படிக்கிறார்கள். இவர்களின் வசதிக்காகவே நூலகத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் வைபை இன்டர்நெட் வசதியும் நூலகத்தின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வு

போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகள், நூலகரிடம் பாஸ்வேர்டை பெற்று வைபை இணைப்பை பெற்று இணையதள சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். போட்டித்தேர்வாளர்களுக்கான புத்தகங்கள் மாவட்ட மைய நூலகத்தில் அமைந்துள்ளதால் அதிகப்படியானவர்கள் இங்கு வந்து படித்துவிட்டு செல்கிறார்கள். பலரை அரசு பணியில் சேர்க்கும் அறிவு பெட்டகமாக விளங்கி வருகிறது.

மாவட்ட மைய நூலகம் அரியவகை புத்தகங்களை பெற்றுள்ளது. அதாவது 40 ஆண்டுகளுக்கு முந்தையை புத்தகங்களை கூட பாதுகாத்து வைத்திருக்கிறது. நவீன யுகத்துக்கு ஏற்ப கணினியில் புத்தகங்களை வாசிக்கும் வகையில் கணினியில் புத்தகங்களை பதிவேற்றும் பணி நடக்கிறது. ஆனால் சில குளறுபடி காரணமாக அவற்றை சரிவர நடைமுறைப்படுத்த முடியாமல் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

மாவட்ட மைய நூலகத்தின் முக்கிய தேவையாக இருப்பது இடவசதி. சாதாரனமாக நூலகமாக இருந்தபோது செயல்பட்டு வந்த அதே கட்டிடத்தில் தான் மாவட்ட மைய நூலகமாக தரம் உயர்த்த பின்பும் செயல்படுகிறது. ஆண்டுதோறும் மாவட்டத்தில் உள்ள நூலகங்களுக்கு 3 லட்சம் புதிய புத்தகங்கள் அனுப்பி வைப்பது வழக்கம். அந்த புத்தகங்களை மாவட்டத்தில் உள்ள அனைத்து நூலகங்களுக்கும் பிரித்து இங்கிருந்து அனுப்பி வைக்கப்படுகிறது. இடவசதி குறைவு காரணமாக புத்தகங்களை பிரித்து அனுப்புவதில் கூட கடுமையான தாமதம் ஏற்படுகிறது. அதுபோல் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாகவும் வாசகர்களுக்கு சரியான தேவைகளை நிறைவேற்ற முடியவில்லை என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.

நூலகங்களில் போய் புத்தகங்களை புரட்டி வாசிப்பது என்பது ஒருவகையான தவம் என்றே சொல்லலாம். அந்த பழக்கம் நம்மிடையே குறைந்து வருகிறதோ என்ற அச்சத்தை புதிய தொழில்நுட்பங்கள் அதிகரிக்கச் செய்கின்றன.அவைகளுக்கு ஈடுகொடுத்து நமது இளைஞர்களை நூலகங்கள் மீட்டு எடுக்குமா? நூலகங்களின் நிலை என்ன? இளைஞர்கள், இளம் பெண்களின் புத்தக வாசிப்பு எப்படி இருக்கிறது? என்பதை கீழே காண்போம்.

அலமாரி வசதியில்லை

இதுகுறித்து மாவட்ட மைய நூலகத்தின் நூலகர் (நிலை-2) தர்மராஜ் கூறியதாவது:-

டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகள் படிப்பதற்கு வசதியாக தனியாக ஒரு அறை நூலகத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான பல புத்தகங்கள் இங்குள்ளன. இங்கு கற்றுத்தேர்ந்தவர்கள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் இடப்பற்றாக்குறையால் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

புதிய புத்தகங்கள் வந்தால் அவற்றை அடுக்கி வைப்பதற்கான அலமாரி வசதி கூட இல்லை. கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 2 லட்சத்து 90 ஆயிரம் புத்தகங்கள் வந்துள்ளன. 1½ லட்சம் புத்தகங்கள் மாவட்டத்தின் மற்ற நூலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டியுள்ளது. மாவட்ட மைய நூலகத்துக்கான இடவசதியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

ஜி.என்.வெங்கடேஷ் (கணபதிபாளையம், உடுமலை):-

இன்றைய இளைய தலைமுறையினரிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. செல்போன்களின் தாக்கம் அதற்கு முக்கிய காரணமாகும். தினசரி செய்தித்தாள் வாசிப்பதால் நாட்டு நடப்பை அறிந்து கொள்ள முடிவதுடன் தமிழ் அறிவை வளர்த்துக் கொள்ளவும் முடிகிறது. ஆனால் தற்போது செல்போன்களில் அதிக அளவில் தமிழை ஆங்கிலம் மூலம் எழுதும் தங்லீஷ் பயன்படுத்துகிறார்கள்.இது மொழியறிவை சிதைக்கும் ஆபத்தான பழக்கமாகும். எனவே வாசிக்கும் பழக்கத்தை மாணவர்களிடம் உருவாக்கும் வகையில் பள்ளிகளில் தினசரி ஒரு மணி நேரம் செய்தித்தாள் வாசிப்பை கட்டாயமாக்க வேண்டும்.

நடராஜன் (நூலகர்):-

நான் 30 வருடமாக நூலகராக பணியாற்றி வருகிறேன். தற்போது செல்போன் பயன்பாடு அதிகரித்து விட்டதால் மக்கள் இருந்த இடத்திலேயே தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கிறார்கள். இதனால் நூலகத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. ஆனாலும் சில பழமையான புத்தகங்கள் செல்போனின் மூலம் கிடைக்காததால் மக்கள் நூலகத்திற்கு வருகிறார்கள்.

பொன்னியின் செல்வன் படம் வந்த பிறகு பள்ளி படிக்கும் மாணவர்கள் மற்றும் வயதானவர்கள் பொன்னியின் செல்வன் நாவல்களை தேடி அதிகளவில் நூலகத்திற்கு வருகிறார்கள்.

கந்தசுவாமி (வாசகர்):-

நல்ல புத்தகத்தைேபால் நண்பர் ஒருவரும் உலகில் இல்லை. மனம் எவ்வளவு பெரிய பாரத்தால் அழுத்தினாலும் புத்தகத்தை படித்து பாருங்கள். மனபாரம் என்று ஒன்று இருப்பதாகவே தெரியாது. நான் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள அரசு நூலகத்திற்கு தினமும் வருவேன். இந்த நூலகத்தில் மின்விளக்குகள் சரிவர செயல்படுவதில்லை. புதிய மின்விளக்குகள் அமைத்து தர வேண்டும். நூலகம் முன்பு இரும்புகம்பிகளை போட்டு வைத்துள்ளார்கள். அவற்றை அகற்ற வேண்டும்.

அருள்சக்தி (புதிய பஸ் நிலையம்):-

நான் பார்க் ரோட்டில் உள்ள மாவட்ட மைய நூலகத்திற்கு தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை போட்டித்தேர்வுக்கு தயார் செய்வதற்காக வருவேன். இந்த நூலகத்தில் 2019-ம் ஆண்டு வரை போட்டி தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாத்தாள்கள் மட்டும் இருக்கிறது. கூடுதலாக 2022 வரை உள்ள வினாத்தாள்கள் இருந்தால் தேர்வு எழுதுவதற்கு பயனுள்ளதாக அமையும்.

திவ்யா (பெருமாநல்லூர்):-

நான் தபால் ஊழியராக 3 ஆண்டுகள் வேலை செய்கிறேன். என்னுடைய வேலை முடிந்த பின்பும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தன்றும் மாவட்ட மைய நூலகத்திற்கு வந்து புத்தகங்களை படிப்பேன். எனக்கு சப்-கலெக்டர் ஆக வேண்டும் என்று ஆசை இருக்கிறது. அதற்கான தேர்வுக்கு தயார் செய்வதற்கு இந்த நூலகத்திற்கு வருகிறேன். ஊரக பகுதியில் உள்ள நூலகத்தில் கூடுதலாக புதிய புத்தகங்களை வைக்க ஏற்பாடு செய்தால் வாசகர்களுக்கு உதவியாக இருக்கும்.

கீர்த்தனா (பாளையக்காடு):-

மாவட்ட மைய நூலகத்தில் போட்டித்தேர்வுக்கு, கல்லூரி படிப்புக்கு தேவையான புத்தகங்கள் அறையில் கிடைக்கிறது. இந்த அறை தினமும் காலை 10 மணி முதல் 5 மணி வரை மட்டுமே செயல்படுகிறது. அதன்பிறகு மூடப்படுகிறது. எனவே நூலகத்தில் உள்ள படிப்பு அறையை நூலகம் மூடும் வரை திறந்து வைக்க நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.

ெஜகநாதன் (ராயபுரம்):-

எனக்கு 86 வயது ஆகிறது. நான் மாவட்ட மைய நூலகத்தில் 40 வருடமாக புத்தகம் படிப்பதற்கு வருகிறேன். அரசியல், சட்டம் போன்ற புத்தகங்களை விரும்பி படிப்பேன். இன்றுவரை படித்து கொண்டிருக்கிறேன். படித்த விஷயங்களை மற்றவர்களுக்கு சொல்கிறேன். ஒருநாளில் குறைந்தபட்சம் 3 மணிநேரம் படிப்பேன். என்னுடைய இளமை காலத்தில் டி.வி. மற்றும் செல்போன் பயன்பாட்டு வசதி இல்லை. இருந்திருந்தால் கூடுதலாக விஷயங்களை தெரிந்து கொண்டிருக்க முடியும். அதை நினைக்கும்போது ஏக்கமாக இருக்கும்.

இவ்வாறு நூலகர் மற்றும் வாசகர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்