ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு வாசலில் 'தமிழ்நாடு வாழ்க' என கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சமூகநீதிக் கொள்கையுடன் தொடர்ந்து பயணிப்போம் என்றும், ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு வாசலில் ‘தமிழ்நாடு வாழ்க' என கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.;
பொங்கலையொட்டி தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
பொங்கல் விழா
பொதுவாக, ஒரு விழாவைக் கொண்டாடுவது மனதுக்கு குதூகலத்தைத் தரும். ஒரு போராட்டத்தை எதிர்கொண்டு, அதில் நீதியையும், நியாயத்தையும் நிலைநாட்டிய பிறகு கொண்டாடும் விழாவில், மகிழ்ச்சி இரட்டிப்பாகும் அன்றோ. ஜனநாயக நெறியில், சட்டத்தின் மாண்பு காத்து, மாநிலத்தின் உரிமையைச் சட்டப்பேரவையில் நிலைநாட்டிய மகிழ்ச்சியுடன் தமிழ்நாட்டின் பொங்கல் விழா தொடங்கியுள்ளது.
ஆண்டு தொடக்கத்தில் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்குவது மரபு. அரசின் கொள்கைகளை முன் வைக்கும் உரையில் இடம்பெற்ற சிலவற்றை கவர்னர் தவிர்த்து, தாமாகச் சிலவற்றை சேர்த்தபோதும் அவை எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறவில்லை. மாறாக, அரசமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு என்ற பெயரும், தந்தை பெரியார், அம்பேத்கர், காமராசர், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட மறைந்த தலைவர்களின் பெயர்களுமே தமிழ்நாடு சட்டமன்றத்தின் அவைக்குறிப்பில் இடம்பெறச் செய்யப்பட்டது.
சுயமரியாதை
தி.மு.க. சுயமரியாதையைப் பின்புலமாக கொண்ட இயக்கம். தமிழ்நாட்டின் சுயமரியாதையைச் சட்டப்பேரவையில் தி.மு.க. தலைமையிலான திராவிட மாடல் அரசு நிலைநாட்டியிருக்கிறது. சட்டப்பேரவையின் மாண்பையும், தமிழ்நாட்டின் சுயமரியாதையையும் காக்கின்ற அரசியல் சட்டம் வழங்கியுள்ள அறவழியிலான போராட்டத்தை மேற்கொண்ட காரணத்தால், இந்த பொங்கல் விழா நமக்கு கூடுதல் இனிப்பு நிறைந்த சர்க்கரைப் பொங்கலாக அமைந்துள்ளது.
அந்த சுவை, தமிழ்நாட்டு மக்களின் இல்லங்களில் பொங்கும் பொங்கலிலும் இடம்பெற்று, அவர்களின் உள்ளமெலாம் இனித்திட வேண்டும் என்பதற்காக ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கியுள்ளது திராவிட மாடல் அரசு. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் நிறைய பொருட்கள் இருந்தன. தரமான முறையில் கவனத்துடன் வழங்கப்பட்டன. ஆயினும் அங்கொன்றும், இங்கொன்றுமாக சில குறைகள் வெளிப்பட்டன.
எதிர்க்கட்சிகள் அவற்றை பூதக்கண்ணாடி வைத்துப் பெருக்கி, அவல அரசியல் செய்ய நினைத்தபோதும், அதனையும்கூட அலட்சியப்படுத்தாமல், குறைகள் குறித்து விசாரித்தறிய குழு அமைக்கப்பட்டது.
விவசாயிகள் மற்றும் தோழமைக் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் கோரிக்கையை ஏற்று முழுக் கரும்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆறடிக்குக் குறையாத அளவில் தடிமனான பன்னீர்க் கரும்புகளைத் தேர்வு செய்து, போக்குவரத்து செலவு உள்ளிட்டவற்றையும் கணக்கிட்டு, விவசாயிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு உள்ளது.
புன்னகை
9-ந் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் முறைப்படி தொடங்கி வைத்தேன். அப்போதே மக்களின் மனத்திலும், முகத்திலும் மகிழ்ச்சி பொங்குவதை நேரில் கண்டு களிப்புற்றேன். "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்" என்ற பேரறிஞர் அண்ணா வழியில், எல்லாருடைய முகத்திலும் புன்னகையைக் காண முடிந்தது.
பொங்கல் திருநாளை நமது பண்பாட்டுத் திருவிழாவாக மாற்றிய பெருமை திராவிட இயக்கத்தையே சாரும். தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், கருணாநிதியும் "இதுதான் தமிழர் திருநாள்" என மக்களின் மனதில் பதிந்திடும் வகையில் சிறப்பான கொண்டாட்டத்தை முன்னெடுத்தனர். தி.மு.க மீதான காழ்ப்புணர்வால் முந்தைய பத்தாண்டு கால அ.தி.மு.க. அரசு, பொங்கல் நன்னாளின் உள்ளீடாக இருக்கும் பண்பாட்டுப் பெருமைகளையெல்லாம் சிதைத்துவிட்டது.
பத்தாண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் பொங்கல் விழாவையொட்டி, தமிழர்களின் பண்பாட்டுக் கலைவிழாவாக 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' நடைபெறுகிறது.
பாரம்பரியக் கலைகளைப் பேணிக் காக்கும் தமிழ்நாட்டுக் கலைஞர்களைச் சிறப்பான முறையில் ஒருங்கிணைத்து இதனை நடத்துகிறார் அன்புத் தங்கை கனிமொழி. சென்னை சங்கமத்தின் ஒரு பகுதியாக இலக்கியச் சங்கமம் என்ற நிகழ்வும் நடைபெறுகிறது.
பன்னாட்டுப் புத்தக விழாவுடன் கூடிய சென்னைப் புத்தக காட்சியும் நடைபெற்று வருகிறது. முத்தமிழையும் முக்கனிச் சுவை போல வழங்கி வருகின்றன தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ள பொங்கல் விழா நிகழ்ச்சிகள்.
மகிழ்ச்சி பொங்க வேண்டும்
தலைநகரில் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வீர விளையாட்டுகள், கலை விழாக்கள், இலக்கிய நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற தொடங்கியுள்ளன.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. தமிழர்களின் 150 ஆண்டுகால கனவான - தென் தமிழ்நாட்டின் தொழில்வளத்தையும், வேலைவாய்ப்பையும் பெருக்கும் சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து செயல்படுத்திடும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு உள்ளது. வீட்டிலும், நாட்டிலும் வளர்ச்சியும், அதனால் எழுச்சியும் மகிழ்ச்சியும் பொங்கிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் நமது அரசு செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு வாழ்க கோலம்
சமத்துவமும், சுயமரியாதை உணர்வும் கொண்ட சமூகநீதிக் கொள்கையுடன் தொடர்ந்து பயணிப்போம். மக்களின் நலன் காப்போம். மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் மீட்போம். ஜனநாயகப் பாதையில் பயணிப்போம்.
ஒவ்வொருவர் இல்லத்தின் வாயிலிலும் 'தமிழ்நாடு வாழ்க' என கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம். செழிக்கட்டும் தமிழ்நாடு! சிறந்து இனிக்கட்டும் பொங்கல் திருநாள்.
தமிழ்நாட்டு மக்களுக்கும், தொண்டர்களுக்கும், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் உங்களில் ஒருவனான என்னுடைய இதயம் கனிந்த பொங்கல் - தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.