சமூகப் பிரிவினைவாத சதி அரசியலை முறியடிப்போம்! - பொது சிவில் சட்ட கருத்துக் கேட்புக்கு திருமாவளவன் கண்டனம்

பொது சிவில் சட்ட அறிவிப்பை எதிர்த்து முறியடிக்க அனைத்து சனநாயக சக்திகளும் முன்வர வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.;

Update: 2023-06-16 10:52 GMT

சென்னை,

பொது சிவில் சட்ட அறிவிப்பை எதிர்த்து முறியடிக்க அனைத்து சனநாயக சக்திகளும் முன்வர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொது சிவில் சட்டம் என்ற பெயரில் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் அடைய முற்படும் பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்திய சட்ட ஆணையத்தின் இந்த அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டுமென்று விசிக சார்பில் வலியுறுத்துகிறோம்.

இந்திய சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்களின் கருத்தை 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என அறிவிப்புச் செய்துள்ளது. தேர்தலை மனதில் வைத்து பாஜக அரசின் தூண்டுதலால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு சட்ட அமைச்சகம் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்திய சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் குறித்த 185 பக்க அறிக்கையை 2018 ஆம் ஆண்டு வெளியிட்டது. அதில் "இந்திய கலாச்சாரத்தின் பன்முகத்தன்மை கொண்டாடப்பட வேண்டும். அதனால், குறிப்பிட்ட குழுக்கள் அல்லது சமூகத்தின் பலவீனமான பிரிவினர் தனி உரிமைகளை இழந்துவிடக்கூடாது. இந்த முரண்பாட்டைத் தீர்ப்பது என்பது பன்மைத்துவத்தை ஒழிப்பது என்று அர்த்தமல்ல. தேவையில்லாத அல்லது விரும்பத்தகாத பொது சிவில் சட்டத்தை கொண்டுவருவதைவிடவும் பாகுபாடு காட்டும் சட்டங்கள் குறித்தே சட்ட ஆணையம் முக்கியமாக கவனம் செலுத்துகிறது. பெரும்பாலான நாடுகள் இப்போது வித்தியாசங்களை அடிப்படையாகக்கொண்ட பன்மைத்துவத்தை அங்கீகரிப்பதை நோக்கி நகர்கின்றன. வெவ்வேறான கலாச்சாரங்கள் இருப்பது பாகுபாட்டைக் குறிக்காது. அது வலுவான ஜனநாயகத்தையே குறிக்கிறது" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த அறிக்கை வெளியிடப்பட்டு ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் புதிய அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அதற்கான காரணம் எதையும் சட்ட ஆணையம் இப்போது குறிப்டவில்லை. அது சொல்லவில்லையென்றாலும் பாஜக அரசின் பெரும்பான்மைவாத நோக்கத்தை நிறைவேற்றும் விதமாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. சட்ட அமைச்சகம் தனது சுயேச்சைத் தன்மையை இழந்து விட்டதா? என்ற கேள்வியைத்தான் இந்த அறிவிப்பு எழுப்புகிறது.

ஏற்கனவே சீக்கிய மதத்தினரும், பௌத்த மதத்தினரும் தங்களுக்குத் தனியே குடும்ப சட்டங்கள் வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். தங்களை இந்து குடும்ப சட்டத்துக்குள் உள்ளடக்கியிருப்பதை எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் முஸ்லிம்கள், கிறித்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமயத்தினருக்கு இருக்கும் குடும்ப சட்டங்களையும் ஒழித்துக்கட்ட மோடி அரசு முற்படுகிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்னும் இந்து ராஷ்டிரம் எனப்படும் 'சனாதன ராஷ்ட்ரக்' கனவின் அடிப்படையிலேயே இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது என்கிற ஐயம் பலருக்கும் எழுந்துள்ளது.

அனைத்துத் தளங்களிலும் படுதோல்வி அடைந்து விட்ட பாஜக அரசு, மக்களின் கவனத்தைத் தனது தோல்வியிலிருந்து திசை திருப்புவதற்காகவே இத்தகைய பிரச்சனைகளை எழுப்புகிறது. விலைவாசி ஏற்றம், வேலையில்லாத பிரச்சினை, பொருளாதார வீழ்ச்சி என சுதந்திர இந்தியாவில் அமைந்த ஆட்சிகளிலேயே மிகவும் மோசமான ஆட்சி இந்த பாஜக ஆட்சிதான் என்ற விமர்சனத்தை மோடி அரசு சந்தித்துக் கொண்டிருக்கிறது. நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்துவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத மோடி அரசு தனக்குத் தெரிந்த ஒரே பிற்போக்கு - பெரும்பான்மை மதவாத அரசியலைக் கையில் எடுத்து மக்களைப் பிளவுபடுத்துவதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறது.

முஸ்லிம்களைக் குறி வைத்து தாக்குதல் தொடுப்பதன் மூலம் இந்தியாவில் பெரும்பான்மை மதத்தவராக இருக்கும் இந்துக்களின் ஆதரவைப் பெற முடியும் என்று பாஜக மனப்பால் குடிக்கிறது. இந்துக்களில் பெரும்பான்மையாக இருக்கின்ற பிற்படுத்தப்பட்ட மக்களும் பட்டியல் சமூகத்தினரும் பழங்குடி மக்களும் இந்த ஆட்சியாளர்களால் கடுமையான ஒடுக்குமுறைக்கும் ஏமாற்றத்திற்கும் ஆளாகியுள்ளனர். இந்துக்களின் பாதுகாவலன் என்று சொல்லிக்கொண்டே பெரும்பான்மை மக்களை ஏமாற்றி சிறிய எண்ணிக்கை கொண்ட முன்னேறிய உயர்சாதியினருக்கும் பன்னாட்டு நிறுவன- கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கும் மட்டுமே சேவை செய்வதாக இந்த பாஜக அரசு உள்ளது.

2024 பொதுத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்திலிருந்து தாம் தூக்கி எறியப்படுவோம் என்பதை முன்கூட்டியே புரிந்துகொண்டதால் மக்களைப் பிளவுபடுத்தும் சமூகப் பிரிவினைவாத அரசியலில் அது தஞ்சம் புகுந்துள்ளது. அதனைத் தீவிரமாக முடுக்கிவிடுகிறது. அரசியல் இலாபத்துக்காக நாட்டில் சமூகப் பதற்றத்தையும் அமைதியின்மையையும் உருவாக்கிட சதிசெய்யும் பாஜக - சங்பரிவார் அரசின் பொது சிவில் சட்ட அறிவிப்பை எதிர்த்து முறியடிக்க அனைத்து சனநாயக சக்திகளும் முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்