பெண் என்ஜினீயருடன் 'லெஸ்பியன்' உறவு: தர்மபுரி மாணவி பெற்றோருடன் செல்ல மறுப்பு-காப்பகத்தில் சேர்ப்பு

பெண் என்ஜினீயருடன் லெஸ்பியனாக பழகி வந்த தர்மபுரி மாணவி பெற்றோருடன் செல்ல மறுத்ததை அடுத்து அவரை தர்மபுரியில் உள்ள காப்பகத்தில் போலீசார் சேர்த்தனர்.

Update: 2022-11-10 18:45 GMT

பென்னாகரம்:

கல்லூரி மாணவி

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ஒருவர், சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயோடெக் படித்து வருகிறார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார்.

இதையடுத்து அவருடைய பெற்றோர் பல்வேறு இடங்களில் மாணவியை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ஏரியூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார், மாணவி மாயம் என வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

லெஸ்பியன் ஜோடி

இந்தநிலையில் கோவையில் இளம்பெண் ஒருவருடன் அந்த கல்லூரி மாணவி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. உடனடியாக போலீசார் கோவை விரைந்து சென்றனர். அங்கு இருந்த கல்லூரி மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

இதில் அந்த மாணவியுடன் இருந்தது பெண் என்ஜினீயர் என்பதும், அவருக்கும் அந்த மாணவிக்கும், சொந்த ஊர் பென்னாகரத்தை அடுத்த அருகருகே உள்ள கிராமங்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் மாணவி படித்த கல்லூரியில் சீனியர் மாணவியாக அந்த பெண் என்ஜினீயரும் படித்து வந்த போது ஊரில் இருந்து ஒரே பஸ்சில் சென்று வந்துள்ளனர். அவர்கள் சகஜமாக பழகி வந்ததும், ஒரு கட்டத்தில் அவர்களிடையே நெருக்கம் அதிகமாகி ஓரின சேர்க்கையாளர்களாக (லெஸ்பியன்) மாறி உள்ளனர்.

கல்லூரி படிப்பு முடித்து சீனியர் மாணவி கோவைக்கு வேலைக்கு சென்றதும், பெண் என்ஜினீயரான அவரை அடிக்கடி சந்திக்க முடியாமல் மாணவி கவலை அடைந்தார். அதே நேரத்தில் இவர்களின் லெஸ்பியன் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது.

அவர்கள் மகளை கண்டித்த நிலையில் மாணவியை கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருந்துள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த அந்த மாணவி ஒரு கட்டத்தில் தனது காதலியான பெண் என்ஜினீயருடன் வாழ முடிவு எடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி விட்டார். பின்னர் அவர் கோவைக்கு சென்று பெண் என்ஜினீயருடன் லெஸ்பியன் ஜோடியாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.

தற்கொலை முயற்சி

இதையடுத்து அந்த மாணவியும், பெண் என்ஜினீயரும் கோவையில் இருந்து பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு நேற்று முன்தினம் அழைத்து வரப்பட்டனர். அங்கு போலீசார் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்தனர்.

கவுன்சிலிங்கின் போது, அந்த பெண் என்ஜினீயர் லெஸ்பியன் உறவில் ஈடுபட்டது தவறோ என்று மனம் மாறிய நிலையில் திடீரென அங்குள்ள கழிப்பறையில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் அந்த பெண் என்ஜினீயர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் பென்னாகரம் குற்றவியல் மற்றும் உரிமையியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரவீனா சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெற்றார். அதன்பிறகு அந்த கல்லூரி மாணவியும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தனது லெஸ்பியன் ஜோடியான பெண் என்ஜினீயரை பார்க்க வந்தார். அப்போது அவர்கள் இருவரும் கட்டித்தழுவி ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறிக்கொண்டனர். பின்னர் அந்த மாணவியை போலீசார் அங்கிருந்து மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

மேலும் அந்த பெண் என்ஜினீயர், கடந்த 9 மாதங்களாக உயிருக்கு உயிராக நாங்கள் பழகினோம், என்னை மிரட்டி என் தோழியை வலுக்கட்டாயமாக என்னிடம் இருந்து பிரித்து விட்டனர் என்று சிகிச்சையின் போது புலம்பியபடி இருந்ததாக தெரிகிறது.

பெற்றோருடன் செல்ல மறுப்பு

இதனிடையே அந்த மாணவியை பெற்றோருடன் செல்லுமாறு போலீசார் கவுன்சிலிங் கொடுத்தனர். ஆனால் அந்த மாணவியோ கடந்த 2 ஆண்டுகளாக பழகி வந்த நாங்கள் ஓரின சேர்க்கையாளர்களாக மாறி விட்டோம். எங்களுக்கு இந்த வாழ்க்கை பிடித்து விட்டது. எனக்கு குடும்பம் என்றால் பெண் தோழி தான். வாழ்ந்தால் இனி அவருடன் தான் வாழ்வேன், பெற்றோருடன் செல்ல மாட்டேன், காப்பகத்துக்கு வேண்டும் என்றால் செல்கிறேன் என்று அந்த மாணவி கூறி உள்ளார்.

இதனால் அதிர்ந்து போன அனைத்து மகளிர் போலீசார் அந்த மாணவியை தர்மபுரியில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசார் ஆலோசனை

தர்மபுரி மாவட்டத்தில் லெஸ்பியன் காதல் ஜோடியினர் பிரிய மறுத்த சம்பவம் பெற்ேறார் மட்டுமின்றி பொதுமக்களிடையே சற்று பீதியை உருவாக்கி உள்ளது. இந்த கலாசார மாறுபாடு குறித்தும், இளையதலைமுறையின் இந்த லெஸ்பியன் உறவு குறித்தும் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சைபர் கிரைம் குற்றங்கள் போன்று, நவீன யுகத்தில் செல்போனில் வரும் ஆண், பெண், ஓரின சேர்க்கை வீடியோக்கள் மற்றும் அதற்கான நட்பை வளர்க்கும் செயலிகள் (ஆப்ஸ்) தான் படிக்கும் இளைய தலைமுறை மாணவ-மாணவிகளை பாதை மாற செய்து விடுகிறது. ஓரின சேர்க்கைக்கு அங்கீகாரம் கொடுத்து இருந்தாலும், தமிழகத்தில் பெரும்பாலும் இயற்கைக்கு மாறான விஷயமாக பார்க்கப்படுகிறது. எனவே இந்த ஓரின சேர்க்கையாளர்கள் விஷயத்தில் கண்ணுக்கு தெரிந்து தர்மபுரி மாணவி சம்பவம் இன்று பேசப்படுகிறது. தெரியாமல் பல இருந்தாலும், பெற்றோரின் தீவிர கண்காணிப்பால் மாணவ-மாணவிகள் இயற்கைக்கு மாறான விஷயங்களில் இருந்து விடுபட்டு விடும் சம்பவங்களும் நடக்க தான் செய்கின்றன. அவை வெளியே தெரிவது இல்லை. எனவே இந்த விஷயத்தில மாணவ-மாணவிகளை விட பெற்றோருக்கு தான் பெரும் பங்கு உள்ளது. மகனோ, மகளோ செல்போனில் நீண்ட நேரம் யாரிடம் சாட் செய்கிறார்கள் என்பதை நாள்ேதாறும் கவனித்து அவர்களின் நடத்தையில் மாறுபாடு இருந்தால் திருத்த வேண்டிய கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். இல்லையேல் இதுபோன்ற சம்பவங்கள் தொடரும் நிலையே இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்