புதர் சூழ்ந்த பகுதியில் பதுங்கும் சிறுத்தைப்புலிகள்
பன்னிமேடு எஸ்டேட் அரசு பள்ளி அருகில் புதர் சூழ்ந்த பகுதியில் சிறுத்தைப்புலிகள் பதுங்குவதால், குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டி வருகின்றனர்.
வால்பாறை
பன்னிமேடு எஸ்டேட் அரசு பள்ளி அருகில் புதர் சூழ்ந்த பகுதியில் சிறுத்தைப்புலிகள் பதுங்குவதால், குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டி வருகின்றனர்.
புதர் சூழ்ந்த பகுதி
வால்பாறை அருகே பன்னிமேடு எஸ்டேட் பங்களா டிவிசன் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளி வளாகத்திற்கு முன்புறம் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. இங்கு ஏதாவது வனவிலங்குகள் பதுங்கியிருந்தால் கூட தெரியாது. இதனால் மாணவ-மாணவிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
இதற்கிடையில் காலை நேரத்தில் குழந்தைகளை பள்ளியில் விட வரும் பெற்றோர் கண் முன்னே அந்த புதர் மறைவில் இருந்து சிறுத்தைப்புலிகள் தாவி குதித்து வெளியே ஓடுவதாக கூறப்படுகிறது. இதனால் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே பெற்றோர் தயக்கம் காட்டும் நிலை உள்ளது.
ஆய்வு செய்ய வேண்டும்
இதுகுறித்து பெற்றோர் கூறியதாவது:-
பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் உள்ள அரசு பள்ளி அருகில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து இருக்கின்றன. இங்கு வனவிலங்குகள் மட்டுமின்றி விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் காணப்படுகிறது. பாம்பு உள்ளிட்டவை பள்ளிக்குள் நுழையும் அபாயம் உள்ளது. இதனால் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. இது தொடர்பாக பன்னிமேடு எஸ்டேட் பள்ளி மட்டுமின்றி வால்பாறையில் உள்ள அனைத்து எஸ்டேட் பள்ளியிலும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அதன்பிறகு இதுபோன்ற சூழலை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.