மேலும் ஒரு கன்றுக்குட்டியை அடித்துக்கொன்ற சிறுத்தைப்புலி
இருக்கூர் அருகே மேலும் ஒரு கன்றுக்குட்டியை அடித்துக்கொன்று தொடர் அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பரமத்திவேலூர்
சிறுத்தைப்புலி அட்டகாசம்
பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர், செஞ்சுடையாம்பாளையம் பகுதிகளில் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கால்நடைகளை தாக்கும் சிறுத்தைப்புலியை பிடிக்கக்கோரி கடந்த 9-ந் தேதி பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்ற சுண்டப்பனை பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்தநிலையில் புளியம்பட்டி, ரங்கநாதபுரம், தோட்டக்காடு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது வீட்டில் கட்டப்பட்டிருந்த கன்று குட்டியை சிறுத்தைப்புலி தாக்கி கொன்று சிறிது தூரம் இழுத்துச் சென்று போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது. தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைப்புலி மீண்டும் இறையை தேட அந்த பகுதிக்கு வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக இருப்பதால் கன்று குட்டி இறந்து கிடக்கும் இடத்திற்கு மனிதர்கள் யாரும் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
வனத்துறையினர் தீவிரம்
இந்தநிலையில் தொடர்ந்து சிறுத்தைப்புலி ஆடு, மாடு, கன்றுகள் மற்றும் நாய்களை வேட்டையாடி வருவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என 9-ந் தேதி நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் இருக்கூர் மற்றும் செஞ்சுடையாம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேரடியாக சென்று மனு அளித்தனர். அதன்பேரில் நேற்று முன்தினம் காலை கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், பரமத்திவேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேகர் உள்ளிட்ட வனத்துறை அலுவலர்களுடன் சிறுத்தைப்புலியை பிடிப்பதற்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்தநிலையில் கிருஷ்ணகிரியில் மேலும் ஒரு கூண்டு கொண்டு வரப்பட்டுள்ளது. முதுமலை பகுதியில் இருந்து மேலும் 2 வனத்துறையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். இருக்கூர் மற்றும் நடந்தை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பாறைகள், அடர்ந்த புதர்கள் மற்றும் பாறைகளுக்கு இடையே குகை போன்று புலிகரடு என்ற பகுதியில் சிறுத்தைப்புலி இருக்கலாம் என கருதி அப்பகுதியில் டிரோன் கேமரா மற்றும் பைனாகுலர் ஆகியவற்றின் உதவியுடன் வனத்துறையினர் சிறுத்தைப்புலியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலி (ஆண்-பெண்) எந்த வகை சிறுத்தை என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.