ஈரோட்டில் எந்திரம் பழுதானதால் லியோ படம் 2 காட்சிகள் ரத்து: தியேட்டர் ஊழியர்களுடன் விஜய் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

ஈரோட்டில் எந்திரம் பழுதானதால் லியோ படம் 2 காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. இதனால்:தியேட்டர் ஊழியர்களுடன் விஜய் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.;

Update: 2023-10-22 00:10 GMT

ஈரோட்டில் உள்ள ஒரு தியேட்டரில் எந்திரம் பழுதானதால் லியோ படம் 2 காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் தியேட்டர் ஊழியர்களுடன் விஜய் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

லியோ படம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ படம் கடந்த 19-ந்தேதி வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் 20 தியேட்டர்களில் இந்த திரைப்படம் தினமும் 5 காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது.

தற்போது தொடர் விடுமுறை என்பதால் லியோ திரையிடப்பட்டு உள்ள தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அதிக எண்ணிக்கையில் உள்ளது. சிலர் ஆன்லைன் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்தும், சிலர் நேரடியாக வந்து டிக்கெட் எடுத்தும் படத்தை பார்த்து மகிழ்கின்றனர்.

எந்திரத்தில் பழுது

ஈரோடு-பவானி ரோடு அசோகபுரம் பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் லியோ படம் திரையிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை 9 மணி காட்சிக்கு சில ரசிகர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்தும், சிலர் நேரடியாக இந்த தியேட்டருக்கு வந்தும் டிக்கெட் எடுத்தனர்.

பின்னர் அவர்கள் படம் பார்ப்பதற்காக தியேட்டர் வளாக பகுதியில் குவிந்தனர். ஆனால் காலை 9 மணி கடந்த பின்னரும் டிக்கெட் வைத்திருந்தவர்கள் யாரும் தியேட்டருக்குள் அனுமதிக்கப்படவில்லை. நீண்ட நேரம் காத்திருந்த ரசிகர்கள் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து தியேட்டர் கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது தான் தியேட்டர் ஊழியர்கள் எந்திரம் பழுதாகி உள்ளதால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தை

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், தியேட்டர் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் தகவல் கிடைத்து வந்த கருங்கல்பாளையம் போலீசார், ரசிகர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ரசிகர்கள் கூறும்போது, 'எந்திரத்தில் பழுதுநீக்கிய பின்னர் எங்களுக்கான காட்சியை ஓட்ட வேண்டும். நாங்கள் லியோ படத்தை பார்த்துவிட்டு தான் இங்கிருந்து செல்வோம்' என்று தெரிவித்தனர்.

அடுத்தடுத்து காட்சிகள் இருப்பதால் உங்களுக்காக தனியாக காட்சிகள் ஓட்ட முடியாது என்றும், டிக்கெட்டுக்கான பணத்தை நீங்கள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் எனவும் தியேட்டர் ஊழியர்கள் கூறினர். அதற்கு ரசிகர்கள், 'நாங்கள் படம் பார்ப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து செலவு செய்து வந்துள்ளோம். எனவே எங்களுக்கு இருமடங்காக பணத்தை திருப்பி தரவேண்டும்' என்று கூறினர்.

ஏமாற்றம்

இதைத்தொடர்ந்து போலீசார், 'நீங்கள் செலுத்திய பணத்தை வாங்கிக்கொண்டு இங்கிருந்து அனைவரும் கலைந்து செல்லுங்கள்' என்று கூறினர். இதற்கிடையில் மதியம் 12.30 மணி காட்சிக்காக முன்பதிவு செய்தவர்கள் தியேட்டருக்கு வரத்தொடங்கினர். அப்போது தியேட்டர் முன்பு மதிய காட்சி ரத்து செய்யப்பட்டதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

இதையடுத்து காலை மற்றும் மதிய காட்சிகளுக்காக முன்பதிவு செய்தவர்கள் பணத்தை திரும்பப்பெற்றுக்கொண்டு, படம் பார்க்க முடியாமல் அங்கிருந்து ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த தியேட்டரில் நேற்று பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்