விசாரணை கைதிகளுக்கு சட்ட உதவி

ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 26-ந் தேதி விசாரணை கைதிகளுக்கான சிறப்பு சிறை அதாலத் நடைபெற உள்ளது.

Update: 2023-08-08 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 26-ந் தேதி விசாரணை கைதிகளுக்கான சிறப்பு சிறை அதாலத் நடைபெற உள்ளது.

சிறை அதாலத்

கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளின் தேக்கத்தை குறைப்பதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட கோர்ட்டுகளில் லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்று வருகிறது. சமரசம் செய்து கொள்ளக்கூடிய வழக்குகளில் பொதுமக்கள் இந்த லோக் அதாலத் நிகழ்வில் தங்களின் வழக்குகளை வெற்றி, தோல்வி இன்றி தீர்த்து கொள்ளலாம். இதன் தொடர்ச்சியாக சிறைச்சாலைகளில் சாதாரண சிறு வழக்குகளில் கைதாகி அல்லது மனம் திருந்தி வாழும் கைதிகள், சட்ட சிக்கலின் காரணமாக சிறைச்சாலைகளில் அடைபட்டு கிடக்கும் சூழலை தவிர்ப்பதற்காக சிறைச்சாலைகளிலும் லோக் அதாலத் நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் விசாரணை கைதிகளுக்காக வருகிற 26-ந்தேதி சிறப்பு சிறை அதாலத் நடத்த சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

26-ந் தேதி

விசாரணை கைதிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் இதர சிறு வழக்குகளில் சட்ட ரீதியாக காலதாமதம் ஏற்படும்போது அவர்கள் தேவையின்றி சிறைவாசத்தை அனுபவிக்க நேரிடும். சிறைச்சாலைகள் என்பது கைதிகளை மன ரீதியாக திருத்தும் இடம் மட்டுமே என்பதால் மனம் திருந்தி வாழும் சிறுவழக்குகளின் கைதிகளுக்கு சிறைக்குள் நீதியின் பலன் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த சிறை அதாலத் நடைபெற உள்ளது.

இதில் விசாரணைக்கு உகந்த வழக்குகளில் மட்டுமே உடனடி தீர்வு காண முடியும் என்பதால் அதற்கேற்ற வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படும். ராமநாதபுரம் மாவட்ட சிறையில் வருகிற 26-ந் தேதி நடைபெறும் சிறை அதாலத்தில் சிறு வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ள விசாரணை கைதிகளின் வழக்குகள் விசாரித்து தீர்வு காணப்படும். இந்த தகவலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர், மாவட்ட நீதிபதி விஜயா தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்