அறப்போர் இயக்கம் மீது சட்டப்படி நடவடிக்கை

பொய்யான குற்றச்சாட்டை திரும்ப பெறாவிட்டால் அறப்போர் இயக்கம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.;

Update: 2023-03-10 18:45 GMT

பொய்யான குற்றச்சாட்டை திரும்ப பெறாவிட்டால் அறப்போர் இயக்கம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

அமைச்சர் ஆய்வு

விசைத்தறிகளுக்கு இலவச மின்சாரத்தை 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட் ஆக உயர்த்திய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பாராட்டு விழா கருமத்தம்பட்டியில் இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், பணிகள் குறித்து தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி முருகேசனிடம் கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கைத்தறி, விசைத்தறி நெசவாளர்கள் சார்பில் பாராட்டு விழா நாளை (இன்று) நடைபெற உள்ளது. இதில் பல ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். விழா ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்றார்.

சட்டப்படி நடவடிக்கை

அப்போது டாஸ்மாக் டெண்டர் விவகாரம் தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது:-

டாஸ்மாக் டெண்டர் தொடர்பாக அறப்போர் இயக்கத்தை சேர்ந்த ஜெயராமன் வெளியிட்டுள்ள உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு அறிக்கையை திரும்ப பெற வேண்டும். இல்லை என்றால் அவர் மீது வழக்கறிஞர் மூலம் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இடைத்தேர்தல் நடைபெற்றதால், ஈரோடு நீங்கலாக, 43 குடோனில் இருந்து மொத்தம் 96 கோடி ரூபாய்க்கான டெண்டரில் வழக்கமான நடைமுறையே பின்பற்றப்பட்டது.

ஆனால் ஆயிரம் கோடி ரூபாய்க்கான டெண்டர் என்பது அபத்தமானது. அதை அவர்கள் திரும்ப பெறவில்லை என்றால் நோட்டீஸ் அனுப்பப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்